முல்லைத்தீவு – நீராவிப்பிட்டியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் 22 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் முள்ளியவளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பெண்ணின் கணவர் கொழும்பு – வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் இருந்து கொழும்பிற்கு வருகைத் தந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு 23 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை (அக். 21) இரவு தனது மனைவியைக் கொலை செய்த பின்னர், அவரது சடலத்தை வீட்டு முற்றத்தில் புதைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ, தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடி படையினர், பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வீட்டிற்கு தேடிவந்த தாய்
நீராவிப்பிட்டி கிழக்கு பகுதியில் அண்மைய சில நாட்களாக வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று தங்கி வந்த இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டு வீட்டின் பின்பாக குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளம் குடும்ப பெண் தொலைபேசியில் தனது தாயாரிடம் நாளாந்தம் உரையாடுவதாகவும் கடந்த 21 திகதிக்கு பின்னர் அவரின் தொலைபேசி துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
இதனையடுத்து நேற்று முன்தினம் (23ஆம் திகதி) மகள் வசிக்கும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டின் பின்புறம் புதிதாக மண்ணால் நிரப்பட்ட குழி ஒன்று காணப்படுவதை தாய் அவதானித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த குறித்த பெண்ணின் தாய் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.