மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளும் 400க்கும் மேற்பட்ட சிங்களர்களும் வருகைதந்து ஆக்கிரமிப்பு பணிகள் தீவிரமடைந்துவருவதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, எங்களுக்கு தீர்வுபெற்றுத்தராதவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குள் நடாத்தும் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்க முன்வராமை கவலைக்குரிய விடயம் என என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்களினால் இன்று பகல் சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து வேண்டுதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கவனயீர்ப்பு பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
தமது மேய்ச்சல் தரை காணி அபகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரியும் காணியை அபகரிப்பாளர்களை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக கடந்த 22நாட்களாக கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.
இந்த நிலையில் தமக்கான தீர்வுகள் இதுவரையில் கிடைக்காத நிலையில் இன்றைய தினத் சித்தாண்டி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய கால்நடை பண்ணையாளர்கள் அங்கு தேங்காய் உடைத்து வேண்டுதல் செய்யும் போராட்டத்தினை நடாத்தினார்கள்.
அதனை தொடர்ந்து ஆலயத்திலிருந்து பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த கால்நடை பண்ணையாளர்கள் தமது போராட்ட இடத்திற்கு முன்பாக மனித சங்கிலி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பெருமளவான பெண்களும் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்து,மேய்ச்சல் தரை எங்கள் நிலம்,எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை உடனடியாக வெளியேற்று,எங்களையும் வாழவிடு,எமது பூமி எமக்கு வேண்டும்,எங்கள் குரல் அதிகாரிகளுக்கு கேட்கவில்லையான போன்ற கோசங்களை எழுப்பினார்கள்.
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் 50க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகளும் 400க்கும் மேற்பட்ட சிங்களர்களும் அப்பகுதியில் வருகைதந்துள்ளதாகவும் தொடர்ச்சியாக அப்பகுதியில் நில ஆக்கிமிப்புகள் தீவிரமடைந்துவரும் நிலையில் அவற்றினை தடுக்க இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது பிரச்சினை குறித்து சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு ஆதரவு வழங்கி ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த நிலையில் எங்களது வாக்குகளைப்பெற்று பாராளுமன்றம் சென்று அமைச்சர்களாகயிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த போராட்டத்திற்கு எதிராக பேசியதும் அந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்காத செயற்பாடும் மிகவும் கவலைக்குரியது எனவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இன்றைய தினம் ஏறாவூர் நீதிமன்றில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நடைபெற்றபோதும் ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத நிலையில் வழக்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
எங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும் எனவும் ஜனாதிபதி எமக்கான தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் ஜனாதிபதி எமது பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவார் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
https://youtu.be/qqPwc8vK85Q