இந்தியாவில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்தை பந்தாடிய நியூஸிலாந்து 9 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
டெவன் கொன்வே, ரச்சின் ரவிந்த்ர ஆகிய இருவரும் சதங்கள் விளாசியதுடன் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 273 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை இலகுவாக்கினர்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து சார்பாக பகிரப்பட்ட சகல விக்கெட்களுக்குமான சாதனை இணைப்பாட்டமாக இது அமைந்தது.
எனினும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கான இரண்டாவது அதிசிறந்த இணைப்பாட்டமாக இது அமைந்தது.
அயர்லாந்துக்கு எதிராக ஜேம்ஸ் மார்ஷல் (161), ப்றெண்டன் மெக்கலம் (166) ஆகியோர் முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 274 ஓட்டங்களே நியூஸிலாந்தின் சகல விக்கெட்களுக்குமான மிகப் பெரிய இணைப்பாட்டம் ஆகும்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியுடன் 12ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தை முடித்துவைத்த அதே இரண்டு அணிகள் 13ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தை அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் இன்று ஆரம்பித்து வைத்தன.
லோர்ட்ஸ் அரங்கில் 2019இல் நடைபெற்ற இங்கிலாந்துக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி 50 ஓவர்கள் நிறைவிலும் சுப்பர் ஓவர் முடிவிலும் சமநிலையில் முடிவடைந்ததால் பவுண்டறிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து உலக சம்பியனாக பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆனால், இன்று நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்து சகல துறைகளிலும் பிரகாசித்து அபார வெற்றியை ஈட்டியது.
இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 283 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது.
மற்றைய ஆரம்ப ஆரம்ப வீரர் வில் யங் இரண்டாவது ஓவரில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (11 – 1 விக்)
டெவன் கொன்வே 121 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 152 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கொன்வே பெற்ற 5ஆவது சதம் இதுவாகும். அத்துடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் அவரது அதிகூடிய எண்ணிக்கையாகவும் இது அமைந்தது.
மறு பக்கத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய 23 வயதான ரச்சின் ரவீந்த்ர 96 பந்துகளில் 11 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 123 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 13ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் ரவிந்த்ர குவித்த கன்னிச் சதம் இதுவாகும்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் 11 வீரர்களும் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களில் மூவர் மாத்திரமே 30க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.
ஜொனி பெயார்ஸ்டோவ், டேவிட் மாலன் ஆகிய இருவரும் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எனினும் பெயார்ஸ்டோவ் (33), மாலன் (14), ஹெரி புறூக் (25), மொயீன் அலி (11) ஆகிய நால்வரும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது இங்கிலாந்துக்கு நெருக்கடியைக் கொடுத்தது. (118 – 4 விக்.)
இந் நிலையில் முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட், அணித் தலைவர் ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பைக் கொடுத்தனர்.
ஜொஸ் பட்லர் 43 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்ததும் மேலும் இரண்டு விக்கெட்கள் சரிந்தன.
லியாம் லிவிங்ஸ்டோன் 20 ஓட்டங்களுடனும் ஜோ ரூட் 77 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
பின்வரிசையில் சாம் கரன் (14), கிறிஸ் வோக்ஸ் (11), ஆதில் ராஷித் (15 ஆ.இ.), மார்க் வூட் (13 ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கி மொத்த எண்ணிக்கையை 282 ஓட்டங்களாக உயர்த்தினர்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் மெட் ஹென்றி 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் க்ளென் பிலிப்ஸ் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிச்செல் சன்ட்னர் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.