முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும், சம்பவம் தொடர்பில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை சந்திக்க தமக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 23 திகதியிட்டு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில், உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மன உளைச்சல் காரணமாக தான் வகித்து வந்த பதவிகளில் இருந்து இராஜினாமா செய்வதாக நீதிபதி சரவணராஜா தெரிவித்திருந்தார்.
நீதவான் இராஜினாமா செய்வதற்குரிய காரணிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, கூடிய விரைவில் அறிக்கையை பகிரங்கப்படுத்த பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபரிடமும் கடிதங்களை கையளிக்க திட்டமிட்டுள்ளனர்.
அவரது பாதுகாப்பு குறைக்கப்பட்டமை உள்ளிட்ட அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், நீதித் துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பாக தீவிர பிரச்சினையை ஏற்படுத்தும் என கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.
இதேநேரம் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பாக உடனடி விரிவான விசாரணைகளை ஆரம்பிக்குமாறு செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார்.
எவ்வாறாயினும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் ஆகியோர் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.