“உயிர் அச்சுறுத்தல் – அழுத்தம் காரணமாக முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா இராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதற்கு சிங்கள இனவாதியான சரத் வீரசேகரவே முழுக் காரணம். எனவே, வடக்கு – கிழக்கிலுள்ள நீதிமன்றச் செயற்பாடுகளை சட்டத்தரணிகள் புறக்கணித்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் ”
இவ்வாறு தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த சிங்கள இனவாதி சரத் வீரசேகரவிற்கு எதிராக வடக்கு – கிழக்கில் மக்கள் போராட்டங்கள் வெடிக்க வேண்டும் ”
” சரத் வீரசேகர பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு பெளத்த துறவிகளைத் தூண்டி இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார். எனவே, இந்த அரசாங்கத்தில் அவர் வகிக்கும் பதவிகள் பறிக்கப்பட வேண்டும்”
” தமிழ் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடிய கவனம் எடுத்து செயற்படுவதோடு பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மக்கள் மட்டும் தான் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் அல்லது மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களைத் தான் நடத்த வேண்டும் என்றில்லை.
பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்”
“தமிழ் நீதிபதியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டு அவர் மீண்டும் முல்லைத்தீவு நீதிமன்றில் பணியாற்றக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் ” – என்றார்.