முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை ராஜினாமா செய்த கையோடு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். உயிர் அச்சுறுத்தலும் உச்ச மன அழுத்தமுமே இதற்கான காரணமாகும்.
இந்த நிலையில் இந்நாட்டில் சட்ட வாட்சியா? சதித்திட்ட வாட்சியா? நடக்கின்றது என்ற கேள்வி எழுகின்றது என முன்னால் நாடாளுமனரற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
சட்டவாட்சி சரியாக இருந்திருந்தால் நீதிபதி சரவணராஜா பதவி விலகவோ நாட்டை விட்டு வெளியேறவோ வேண்டி இருக்காது.அவர் இந்த நிர்ப்பந்தத்திற்கு உள்ளானதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரதும்,சட்டமாதிபரதும் அழுத்தங்களே முக்கியமான காரணங்கள் என்று பரவலாகப் பேசப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீர சேகர அவர்கள் தனது சிறப்புரிமையைப் பயன்படுத்தி நீதிபதி சரவணராஜா அவர்களைப் பற்றிக் காரசாரமாக விமர்சித்தார்.மேலும் சட்டமாதிபர் குருத்தூர் மலை விவகாரம் தொடர்பான நீதிபதியின் தீர்ப்பை மாற்றியெழுதுமாறு கூறியதாகவும் குறித்த நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இவை தவிர,நீதிபதியின் பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதுடன், புலனாய்வுத்துறையினர் அவரைத் தொடர்ந்ததாகவும் கூறியுள்ளார்.இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட உச்ச அழுத்தம், உயிர் அச்சுறுத்தலால் நீதிபதி தான் நேசித்த பதவியையும் துறந்து, நாட்டையும் விட்டு வெளியேறியுள்ளார். இப்படியான நிலை இது தான் முதற்தடவை ஏற்பட்டுள்ளது.
ஆட்சியாளர்கள் தமது தாளத்திற்கு ஏற்ப ஆட மறுக்கின்றவர்களை, அடிபணிய வைப்பதற்கு கையாளுகின்ற உத்திகள் பலவுள்ளன.அவற்றில் பொலிஸ் பாதுகாப்பைக் குறைத்தல்,புலனாய்வுத் துறையினரைப் பின்தொடர வைத்தல் , அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்தல் என்பனவும் அடங்கும்.
இதை விட அநாமதேய தொலைபேசி அச்சுறுத்தல்களும் இடம் பெறுவதுண்டு. 2010 – 2015 இற்கு இடைப்பட்ட மகிந்த ஆட்சியில் பிரதம நீதியரசராக இருந்த சிராணி பண்டாரநாயக்கவுக்கும் பலத்த அரசியல் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால் அவர் பதவியும் இழந்தார்.
சுதந்திரமான நீதித்துறையானது, அதிகார வர்க்கத்தின் தேவைக்கு ஏற்ப அசையாமல் அடங்காமல் செயற்பட்டால், அங்கு சட்டவாட்சி நடைபெறும். அத்துறையும் அடங்கினால் சதிடத்திட்டங்களும், சர்வாதிகாரமும் தலை தூக்கி விடும்.
எனவே இன்றைய நிலையில் நீதிபதி சரவணராஜா அவர்களது பதவி துறப்பும், வெளியேற்றமும் நாட்டில் சட்டவாட்சியை விட சதித்திட்ட ஆட்சி வெற்றி பெற்றுள்ளதா? என்று எண்ணத் தோன்றுகின்றது.
பொருளாதாரத்தை வங்குரோத்து அடையச் செய்த பொருளாதாரக் குற்றவாளிகள், தற்போது சட்டவாட்சியையும் ஜனநாயகத்தையும் வங்குரோத்து நிலைக்குத் தள்ள முற்பட்டுள்ளனர்.
நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் மக்களின் நிலை என்ன வாகும் என்பதை சர்வதேச சமூகம்,சர்வதேச அமைப்புகள் உரத்த சிந்தனைக்குட்பட்டுத்தி, துரிதமாகச் செயற்பட வேண்டியுள்ளது.
பொருளாதாரத்தையும்,தேசிய ஐக்கியத்தையும், மனிதவுரிமைகளையும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளிய சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் இனமத துவேசத்தில் மட்டும் தம்மை ராஜாக்களாக நினைக்கின்றார்கள் என்றார்.