வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டமை வேதனைக்குரிய விடயமென்றும் இத்தைகைய செயற்பாடு மீண்டுமொரு முறை நடைபெறாதவாறு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா பல்கலைக்கழகத்தின் பௌதிக வளங்கள் முழுமையாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.வவுனியா பல்கலைக் கழகமானது, யாழ் பல்கலைக்கழகத்தின் கீழ் வவுனியா வளாகமாக 32 வருடங்களாக இருந்து அதன்பின்னர் வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு 2 வருடங்களாகியுள்ள நிலையிலும் வவுனியா வளாகமாக செயற்பட்ட போது காணப்பட்ட பௌதிக வளங்களை கொண்டே தற்போதும் பல்கலைக் கழகமாக செயற்படுகின்றது.
அதேவேளை, பல்கலைக்கழகத்தின் வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சு சார்ந்து எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதியாக 17வது பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்ட வவுனியா பல்கலைக்கழகத்தின் பௌதிக வளங்கள் தொடர்பாக தேசிய கொள்கை திட்டமிடல் ஊடாக 8 திட்டங்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளதோடு 3 அமைச்சரவை பத்திரங்கள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு வவுனியா பல்கலைக்கழக உபவேந்தருடன் பேச்சு நடந்த ஏற்பாடு செய்து தருமாறும் கல்வி அமைச்சரிடம் அவர் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.