இலங்கையில் தமிழர்கள் அகிம்சை வழியிலும் வாழ முடியாது என்பதை சர்வதேசமும் மனித பேரவையும் உணர்ந்திருக்கும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (19.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தியாகி திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய மக்கள் அஞ்சலி ஊர்தியையும் அதில் பயணித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி நடராஜா காண்டீபன் உட்பட ஊர்தியோடு பயணித்தவர்கள் தேசிய கொடி தாங்கியவர்களால் மிருகத்தனமாக கொலை வெறியோடு தாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிப்பதோடு தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத வன்முறை அரசியலை இனவாதிகள் தொடர்ந்தும் செய்ய விரும்புகின்றார்கள் என்பதையே தாக்குதல் வெளிப்படுத்துவதோடு இந்நாட்டில் தமிழர்கள் அகிம்சை வழியிலும் வாழ முடியாது என்பதை சர்வதேசமும் மனித பேரவையும் உணர்ந்திருக்கும் என நம்புகின்றோம். தொடர்ந்து மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரையும் இத் தாக்குதல் சம்பவம் அவமானப்படுத்தியுள்ளது.
தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என ஐவரை கைது செய்துள்ளமை நடைபெறும் மனித உரிமை கூட்டத்திற்கு தாக்குதல் தொடர்பில் அரசு சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது என காட்டும் கண்துடைப்பு நாடகமாகும். தாக்குதல் தொடர்பில் காட்சிகளின் பதிவு சமூக வலைத்தளங்களில் போதுமான சாட்சியாக இருக்கும் போது ஐவர் மட்டும் கைது செய்யப்பட்டது ஏன்?
திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்தி பயணத்தை ஆரம்பத்திலிருந்து அரச புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக முன்னும் பின்னும் பயணித்ததை நாம் அறிவோம். எல்லா பொலிஸ் நிலையங்களுக்கும் இது தெரியும். அவ்வாறு இருக்கையில் எந்தெந்த இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என பொலிசார் அறிந்திருந்தும் அதை தடுக்க முன் ஏற்பாடு செய்யாதது ஏன்? ஊர்தி வழிப்பயணம் தொடர்பாக புலனாய்வு பொலிசார் யார் யாருக்கெல்லாம் தகவல் கொடுத்தார்கள்? என்பதனை அவர்களின் தொலைபேசியை ஆராய்வதன் மூலம் கண்டறியலாம். தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் தமக்கே உரிய பாணியில் தடுக்க முயற்சிக்காதது ஏன் ?எனும் கேள்விகளுக்கு தாக்குதல் திட்டமிட்ட அரச பயங்கரவாதத்தின் கோரம் என்பதே உண்மை.
தமிழர்களுக்கு எதிராக இனவாத நோக்கில் வரலாற்றில் வன்முறையினை கட்டவிழ்த்து விட்டவர்கள்,தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெறுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவ்வாறே நீதிமன்ற குற்றவாளிகளாக அடையாளம் கண்டாலும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வெளியில் வந்து விடுவார்கள். இது கடந்த கால எமது அனுபவம்.
திலீபன் அஞ்சலி ஊர்த்தியின் மீதும் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி மற்றும் திலீபன் உணர்வாளர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர கொலை வெறி தாக்குதல் தமிழ் மக்களின் உள்ளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிங்கள உறவுகளும் அரசின் மீதும் அரசின் பாதுகாப்பு கட்டமைப்பின் மீதும் கோபம் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் கோப உணர்வுகளை அறிக்கைகளில் மட்டும் காட்டாது தொடரும் திலீபன் மக்கள் அஞ்சலி ஊர்திக்கு பாதுகாப்பு கொடுக்கவும் அது பயணிக்கும் வழிகளில் எல்லாம் மக்கள் அஞ்சலிகளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதனை ஒரு கட்சியின் செயல் என ஒதுக்கினால் மக்கள் அரசியல் செய்ய முடியாது போய்விடும் என்பதையும் கூற விரும்புகின்றோம்.
அது மட்டுமல்ல இறுதி நாள் நிகழ்வு எழுச்சியாகவும் அமைதியாகவும் நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் கடந்த வருடத்தை போன்று போட்டி நிகழ்வாக அமைந்து விடுமாய் அது இறைவனுக்கும் எனது அரசியலுக்கும் அவமானமாக அமைந்துவிடும் இனவாதிகளுக்கு அது தீமையாகவும் அமைந்துவிடும் என அழைப்பினை தீவிரப்படுத்தியிருக்கும் இக்காலகட்டத்தில் தமிழ் தலைமைகள் கட்சி அரசியல் மற்றும் தேர்தல் அரசியலுக்கு வெளியில் வந்து தமிழர்களின் தேசியம் காக்க ஒன்றிணைய வேண்டும் என்ற தாக்குதல் சம்பவம் எமக்கு உணர்த்துகின்றது எனவே தமிழ் அரசியல் தலைவர்கள் யாருக்காகவும் அரசியல் செய்யாது தமிழர் தேசத்திற்காக மக்கள் அரசியல் செய்ய திலீபன் நினைவேந்தல் வாரத்தில் உறுதி கொள்வோம். அதனை நாட்டின் பேரினவாத அரசுக்கும், சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்துவோம்.