கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் நூற்றுக்கணக்கான உடலங்களை குவித்துப் போட்டு புதைத்திருப்பதனை அவதானிக்க முடிகின்றது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் வடமாகாண சபையின்முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
https://youtu.be/BvAyb0oDg8E
அதிக எதிர்பார்ப்போடு போராடிக் கொண்டிருக்கின்ற பெற்றோருக்கும் தங்களுடைய பிள்ளையோ? என்ற ஒரு வேதனை இருக்கிறது. இறந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்கின்றது போலான தோற்றத்தில் இங்கே புதைக்கப்பட்டிருக்கவில்லை. இன்னும் நூற்றுக்கணக்கான உடலங்கள் இதற்குள் போட்டு குவிக்கப்பட்டுள்ளதாகவே பார்க்கின்றோம். ஏனெனில் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த ஒரு தடயமாக தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சனல் 4 இல் 269 பேருடைய கொலைகள் தொடர்பாக விவாதித்துக்கொண்டிருக்கின்ற ஒருபக்கம் மனித படுகொலையை செய்து இந்த மண்ணிலே புதைக்கப்பட்டு மூடப்பட்டிருக்கின்ற ஒரு விடயத்தை பேசு பொருளாக்காமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த மண்ணிலே வாழ்ந்தவர்கள் என்ற வகையில் இது ஒரு சூனிய பிரதேசமாக, சுற்றிவர இராணுவ முகாம்கள் தான் இருந்திருக்கிறது. இறுதி போரின் பின்னர் பெண் போராளிகளை பேருந்துகளில் ஏற்றி செல்வதனை படங்களிலும் , நேரடியாகவும் பல விடயங்களை பார்த்திருக்கின்றோம்.
மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த இடத்திற்கு வந்து தங்களது ஆதரவை கொடுப்பதன் ஊடாக தான் நிறைய உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுவதோடு அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதாக இருக்கும்.
தொடர்ந்தும் இவ் இடம் முழுமையாக ஆய்வுக்கு கொண்டுவர வேண்டும். எதிர்வரும் காலம் மழைக்காலம் ஆகையால் எவ்வாறு இவர்களுடைய ஆய்வுகள் கொண்டு செல்லப்படும் என்ற கேள்வியும் இருக்கிறது. அல்லது இத்தோடு நிறுத்தி விடுவர்களா என்ற ஐயப்பாடும் இருக்கிறது.
தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கின்ற அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் புதைகுழி தொடர்பான உலக கவனத்தை ஈர்ப்பதற்கான தங்களுடைய முழு அழுத்தத்தையும் பிரயோகிப்பதன் மூலந்தான் எங்களுக்கான ஒரு சர்வதேச நீதியை பெற வழிவகுக்கும் என கருதுகின்றேன் என்றார்.