முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) வியாழனன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளிகளின் மனிதச்சங்கள் இரண்டு முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், அந்த மனித எச்சங்களுடன் மீட்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளிலும், பச்சைநிற முழுநீள காட்சட்டைகளிலும் இலக்கமிடப்பட்டிருந்துள்ளது. அத்தோடு குறித்த மனித எச்சங்கள் இரண்டிலும் துப்பாக்கி ரவைகள் இருந்துள்ளமையையும் அவதானிக்க முடிந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த அகழ்வுப் பணியில் இணைந்திருந்த சட்டத்தரணிகளுள் ஒருவரான கே.எஸ்.நிரஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,
https://youtu.be/skoFTRz-XZ0
ஏற்கனவே இனங்காணப்பட்ட மனித மனித எச்சங்களில், இரண்டு மனித உடல்களின் மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் இரண்டும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்போராளிகளுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
அத்தோடு அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன.
அதற்கமைய முதலாவது மனித எச்சத்தின் பச்சைநிற நீளக் காற்சட்டையில் 3204 என்ற இலக்கமும், முளுநீள கையுடைய மேற்சட்டையும், 3174இலக்கமுடைய பெண்களின் உள்ளாடையும், மார்புக் கச்சையும் எடுக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது மனித எச்சம் அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதிலும் பச்சைநிறக் முழுநீளக் காட்சட்டையும், முழுநீளக் கையுடைய மேற்சட்டையும், 1564 இலக்கமுடைய உள்ளாடையும், மார்புக்கச்சையும் எடுக்கப்பட்டது
அதேவேளை அகழ்ந்தெடுக்கப்பட்ட இருமனித எச்சங்களிலும் துப்பாக்கி ரவைகள் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
மேலும் அவ்வாறு ஆடைகளில் இலக்கங்கள் மாத்திரமே பொறிக்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு நிறத்திலான நூலினாலேயே ஆடைகளில் இலக்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் குறித்த அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி, சட்டத்தரணி ரனித்தா ஞானராசா, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள், தடயவியல் பொலிசார், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன், கொக்குத்தொடுவாய் கிராமஅபிவிருத்திச் சங்கத்தலைவர் கி.சிவகுரு ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தில் பொலிசார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எச்சங்களும், தடயப்பொருட்களும் பொதியிடப்பட்டு, சட்டவைத்திய அதிகாரியால் பகுப்பாய்வுகளுக்காக எடுத்து செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.