கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் அச்சுறுத்தல்!

Share

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் மூன்றாவது நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று இடம்பெற்றுவரும் நிலையில், அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் சரவணன் மற்றும், பாலநாதன் சதீஸ் அகியோரின் கடமைக்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தியதுடன், குறித்த ஊடகவியலாளர்களை பொலிசார் அச்சுறுத்தியுமுள்ளனர்.

குறித்த மூன்றாவது நாள் அகழ்வாய்வு பணிகளை பார்வையிடுவதற்கு யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் மனிதப்புதைகுழி அமைந்த பாதுகாப்புக்கூரை அமைக்கப்பட்ட உட்பகுதியிலிருந்து பார்வையிடுவதற்கு வருகைதந்த மருத்துவபீட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அப்போது அங்கு குறித்த மனிதப்புதைகுழியின் பாதுகாப்பு கூரையின் வெளியே இருந்து ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் சரவணன் மற்றும், பாலநாதன் சதீஸ் ஆகியோர் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியாதென ஊடகவியலாளர்களின் கடமைக்கு பொலிசார் இடையூறு ஏற்படுத்தியதுடன், தள்ளி அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

அத்தோடு நீண்ட தூரத்திலிருந்து (கொக்கிளாய் பிரதான வீதியில்) இருந்தே செய்தி சேகரிக்க வேண்டுமெனவும் ஊடகவியலாளர்களை பொலிசார் எச்சரித்துமிருந்தனர்.

இந்த மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் ஏற்கனவே இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பொலிசாரின் இத்தகைய அடக்குமுறைச் செயற்பாடு ஊடகவியலாளர்களுக்கு பெருத்த அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை கடந்த செப்ரெம்பர் (07) வியாழன் அன்று இரண்டாவதுநாள் அகழ்வாய்வின்போது ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த இரண்டாம் நாள் அகழ்வாய்வில் தடையப் பொருட்களாக துப்பாக்கிச் சன்னங்கள், துளைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் பெண்களின் ஆடைகள் என்பன கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான சூழலில் மூன்றாவது நாள் அகழ்வாய்வில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசார் அச்சுறுத்தல் வழங்கி, அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரித்தமை, குறித்த அகழ்வுப்பணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் ஊடகவியலாளர்களின் கடும் பிரயத்தனத்தின் பின்னர், இந்த விடயம் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பிற்பாடு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/8dPabHE_aNo?si=gDwXsQjKXYUUv8Gg

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு