ஆசிய கிண்ணத் தொடருக்கான இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இலங்கை அணி போராடி வெற்றியை பெற்றுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத் தொடர் கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறான நிலையில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று (05) நடத்த கடைசி லீக்கில் (பி பிரிவு) இலங்கை ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பெத்தும் நிஸ்ஸங்க 41 ஓட்டங்களையும் மற்றும் சரித் அசலங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அப்கானிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் குல்பாடின் நைப் 4 விக்கெட்டுக்களையும், ரஷித் கான் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதேவேளை, இலங்கை அணி நிர்ணயித்த 292 ஓட்டங்கள் வெற்றி இலக்கை ஆப்கானிஸ்தான் அணி 37.1 பந்தில் அடித்தால் சூப்பர் 4 சுற்றுக்கு தெர்வாகும் என தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, 292 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியில் துவக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறிய நிலையில், அணியின் தலைவர் மற்றும் மொஹமட் நபி ஜோடி இணைந்து அணியை வெற்றியின் இறுதி கட்டத்திற்கு எடுத்து சென்றனர்.
அப்கானிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் நபி 65 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட நிலையில் இருவரும் ஆட்டமிழந்தனர்.
இதேவேளை 38 ஆவது ஓவரை தனஞ்சய டி சில்வா வீசிய போது ஒரு பந்துக்கு 3 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்தது. அவர் வீசிய முதல் பந்தில் முஜீப் உர் ரகுமான் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தெரிவானது.
அதனை தொடர்ந்து 4 ஆவது பந்தில்ஃபசல்ஹக் பாரூக்கி ஆட்டமிழந்ததை தொடர்ந்து இலங்கை அணி 2 ஓட்டங்களால் போட்டியிலும் வெற்றிப் பெற்றது.
அதன்படி, 292 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 289 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் கசுன் ராஜித 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். துனித் வெல்லாலகே இறுதி கட்டத்தில் சிறப்பாக பந்து வீச்சி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.