கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 90 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டுமொரு அதிசயம் நடந்தேறியுள்ளதாக தேரோட்டத்திற்கு சென்ற அடியவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இன்று மாலை 4.00மணிக்கு ஆரம்பமான தேரோட்ட நிகழ்வில் பிள்ளையார் தேரும், எம்பெருமான் சித்திரத்தேரும் வீதிவலம்வருவது வழமை . தேரில் வடம்பொருத்தி வடத்தின் ஊடாக பக்தர்கள் தேரினை இழுத்துச் செல்வார்கள்.
ஆனால் இவ்வாண்டு வீதிவலம் வந்த பிள்ளையார் தேர் வடக்கு வீதி வரை வந்தும் எம்பெருமான் சித்திரத்தேரில் பொருத்தப்பட்டிருந்த வடம் ஐந்து தடவைகள் அறுந்ததுடன் சித்திரத்தேர் ஓடாமல் நின்றுள்ளது.
அதன்பின் வரலாற்றில் முதல்தடவையாக 5 வடங்கள் பூட்டிய பின்பே தேர் வீதிவலம் வந்தது.
இதேபோன்று பல வருடங்களுக்கு முன்பு இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளதாக ஊர்பெரியார்கள் தெரிவிக்கின்றனர்.
1920களில் தேர் ஆலயத்தைவிட்டுச்சென்று ஆற்றில் தாண்டதாகவும், 1933இல் உள்வீதியில் வலம்வந்த இருதேர்களும் ஓடாமல் இடைநடுவில் நின்றதாகவும் மூன்று நாட்களுக்குப்பிறகு படுவான்கரை ஊர் மக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தேரினை இழுத்துச்சென்று குறிப்பிட்ட இடத்தில் விட்டதாக தெரிவிக்கின்றனர்.
இன்று நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு பீதியினை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிந்தது.
அதன் பின்னர் ஆலய பிரதம குரு தேரில் இருந்து இறங்கி மூலாலயம் சென்று தலைமேல் கைகூப்பி கையேந்தி தான் தோன்றி அப்பனை மன்றாடி எல்லாம் வல்ல அம்மை அப்பனை மனமுருக வேண்டி பக்தர்கள் பக்தியில் கண்ணீர் சொரிய அரோகரா கோசம் வான் முழங்க வேண்டுதல் செய்து உள் வீதியை சுற்றி எடுத்து வரப்பட்ட தேங்காய் தேரையும் சுற்றி வந்து உடைக்கப்பட்ட அடுத்த கணமே வானில் இருந்து ஜோதி வடிவானவன் திருவருளால் நெருப்பு தோற்றம் போன்று சூரிய கதிர்களாக தோன்றி இராஜகோபுரம் , சித்திர தேர் போன்றவற்றில் ஒலிக்கீற்று பட்டு அதிசயம் நடந்த பின்னர் தேரில் ஐந்து வடங்கள் பூட்டி பின்னர் எம்பெருமான் சித்திரை தேர் அசைந்து வலம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.