தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை என கூறும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இலங்கையின் நீதித்துறை கேள்விக்குறியே என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இன்று (28) முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வடகிழக்கு தழுவிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குளாய் கொக்குதொடுவாயில் அளவுகணக்கு தெரியாதளவில் போராளிகள், மக்கள் ஆயிரக்கணக்கில் புதைக்கப்பட்ட மனித புதைகுழிக்கு எதிராக ஒரு சர்வதேச விசாரணை வேண்டி சர்வதேசத்தின் மேற்பார்வையோடு நீதியான முறையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் தேசிய மண்ணிலே பல்வேறுபட்ட இடங்களில் மனித புதைகுழிகள் இன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த மனித புதைகுழிகள் வெளியில் வருமானால் இலங்கை இராணுவம் இலங்கையினுடைய கடற்படை, விமானப்படை , பாதுகாப்பு படைகள் கேள்விக்குட்படுத்தப்படுவார்கள். குறிப்பாக இப்போது கொக்குத்தாெடுவாயிலே கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, மண்டைதீவிலே இருக்கின்ற மனித புதைகுழி , இன்னும் பல இடங்களிலே இராணுவ முகாம்களிலே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மனித புதைகுழிகள் என்பது இராணுவம் மற்றும் அரசபடைகளால் மிகவும் வன்மமான முறையிலே அவர்கள் அழைத்து செல்லப்பட்டு மிக நுட்பமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தமிழ் உறவுகளுடையதாக இருப்பதனால் இப்போராட்டத்தில் இன்று மக்கள் அணிதிரண்டிருக்கிறார்கள்.
சர்வதேச சமூகத்திடம் நாம் கோருவது ஒரு நீதி விசாரணை வேண்டும். நாங்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படுகின்றோம். இந்த மண்ணிலே நீதியற்ற மனிதர்களாக தமிழர்கள் தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த நீதி விசாரணை என்பதற்காகத்தான் ஒரு சர்வதேச நீதி கோரி இன்று மக்கள் அணியாக திரண்டு தமது ஆதங்கத்தையும், உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாக இப்போராட்டம் அமைந்துள்ளது.
மனித புதைகுழிகள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டாலும் அது தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்படவில்லை. இந்நேரத்தில் புதிதாக மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றது . இதற்கு நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கம் என்பது உண்மையில் நீதியாக நடப்பதில்லை. தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் கூட அதனை பிழை என கூறும் இலங்கையின் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை இலங்கையின் நீதித்துறை சரியாக செயற்படுமா? இவர்களால் நீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா ? என்பது கேள்விக்குறியே அதனால்தான் செம்மணி மனித புதைகுழியிலிருந்து மண்டைதீவு மனித புதைகுழி மற்றும் கொக்குதொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, மன்னாரில் இருக்கும் மனித புதைகுழி என இவ்வாறு பல இடங்களிலும் மனித புதைகுழிகள் தோண்ட தோண்ட தமிழர்களாக வந்து கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய அநியாயம். அந்த அநியாயத்தினுடைய நீதி என்பது இலங்கையிலே கிடைக்காது அதனால் தான் இந்த சர்வதேச நீதி விசாரணையை கோரி இந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.
https://youtu.be/bnbfNRY7Uk4