“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக பொலிஸ் அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்தும் முயற்சிக்கு சர்வகட்சி மாநாட்டில் கடும் எதிர்ப்புக் காணப்பட்டது. புதிய ஜனாதிபதி, புதிய நாடாளுமன்றம் எனும் நிலைமாறல்களுக்குப் பின்னர்தான் தேசிய இனப் பிரச்சினை தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்பட முடியும்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வகட்சி மாநாடு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“13ஆவது திருத்தத்தை முழுமையாகப் பொலிஸ் அதிகாரத்துடன் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, கெவிது குமாரதுங்க, சரத் வீரசேகர ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று கோரின.
தேர்தலை நடத்தினால் தெற்கின் ஏழு மாகாணங்களிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை ரணில் வழங்கிவிட்டால் என்றவாறே தென்னிலங்கையில் இனவாதப் பரப்புரை நடக்கும். அதனால் தேர்தல்களை நடத்த முடியாது என்று ஜனாதிபதி ரணில் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலையும் எந்தக் காரணத்துக்காகவும் ரணில் நடத்த மாட்டார் என்பது தெளிவாகின்றது. இதுவே இப்போதுள்ள அரசியல் நிலைமை. எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராவோம்.
புதிய ஜனாதிபதி, அதையடுத்துப் புதிய நாடாளுமன்றம் என்ற நிலைமாறல்களுக்குப் பின்னர்தான் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்பட முடியும்.” – என்றார்.