போராட்டங்கள் தமிழர்களின் உரிமைக்கானவை! – எல்லாவல மேத்தானந்த தேரருக்கு ஸ்ரீநேசன் பதிலடி

Share

அஹிம்சை வழி, ஆயுத வழி போராட்டங்கள் தமிழர்களின் உரிமைக்கானவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் இன்று (20) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

“தமிழர்கள், தமிழ்த் தலைவர்கள் தமக்கான உரிமைகளையே கோருகின்றனர். அவர்கள் சிங்களவர்களதோ ஏனைய மக்களதோ உரிமைகளைக் கோரவும் இல்லை; பறிக்க நினைக்கவும் இல்லை. இதனைச் சிங்கள மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். எல்லாவல மேத்தானந்த தேரர் அண்மையில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். பிரபாகரன் கேட்டதையே தமிழ்த் தலைவர்கள் கேட்கின்றார்கள் என்பதே அக்கருத்தாகும்.

அறவழியில் – அஹிம்சை வழியில் தந்தை செல்வா கேட்டதும், ஆயுத வழியில் விடுதலைப்புலிகளின் தலைவர் கேட்டதும், தற்போது மீண்டும், அறவழியிலும் இராஜதந்திர வழியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் ஐயா மற்றும் தமிழ்த் தேசியத் தலைவர்கள் கேட்பதும் தமிழ் மக்களின் உரிமைகளைத்தான். ஏனைய மக்களின் உரிமைகளை ஒருபோதும் தமிழ்த் தலைவர்கள் கேட்கவில்லை என்பதை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல்வாதியுமான எல்லாவல மேத்தானந்த தேரர் புரிந்துகொள்ள வேண்டும்.

காலாதி காலமாக தாம் வாழுகின்ற வடக்கு – கிழக்கு தாயக பூமியில், சுயநிர்ணய உரிமையுடன் – சுய கெளரவத்துடன் வாழவே தமிழர்கள் விரும்புகின்றார்கள். இதனைப் புரிந்தும் புரியாதவர்கள் போன்று அரசியல் தேவைக்காகச் சிங்கள மக்களை சிங்கள அரசியல் தலைவர்கள் ஏமாற்றி வருகின்றார்கள்.

75 ஆண்டுகளாகத் தமிழ் மக்களை மட்டுமல்லாமல் சிங்கள மக்களையும் சிங்களத் தலைவர்கள் ஏமாற்றி வந்துள்ளார்கள். எல்லாவல மேத்தானந்த தேரரின் மேலுமோர் கருத்தின்படி வடக்கில் தமிழர்களைக் குடியேற்றும் விடயத்தில் கூட தேரர்கள், சிங்கள அரசியல் தலைவர்களின் அனுமதி இருக்க வேண்டும் என்பதாக அமைந்துள்ளது. அதாவது குருந்தூர் மலையை அண்மித்த 350 இற்கு மேற்பட்ட காணிகளில் தமிழர்களைக் குடியேற்றக் கூடாது என்று ஜனாதிபதியை எச்சரிக்கும் வகையில் எல்லாவல மேத்தானந்த தேரர் தன்னைத்தானே உயர்த்தியுள்ளார்.

தமிழர்களுக்கு என்று பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழர்களையும் அவர்களது நிலத்தையும் எதுவும் செய்யலாம் என்ற நிலைமை 2009 இற்குப் பிற்பட்ட சூழல் தோற்றுவித்துள்ளது. இலங்கையின் ஒற்றையாட்சி முறை, சிங்கள – பெளத்த முதன்மை வாதம், ஆளும் கட்சி – எதிர்க்கட்சிகள் முறைமை, பொலிஸ் துறை, படைத்துறை, புலனாய்வுத்துறை, தொல்லியல் துறை என யாவும் சிங்கள மயமாகி இருத்தல் தமிழ் பேசும் மக்களுக்குப் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.

இவை தவிர தலையாட்டும் ஆளும் கட்சிசார் தமிழ் அரசியல் பொம்மைகளின் பதவி சுகம், பண சுகம் என்பனவும், சிறு சலுகைக்கு வாக்களிக்கும் மக்களும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் சிங்கள எதேச்சதிகாரத்துக்கும், தமிழர் மீதான ஒடுக்குமுறைக்கும் வழிகோலி வருகின்றனர்.

சிங்கள – பௌத்த மயமாக்கலுக்குப் பதவி மோகம் கொண்ட தமிழ்ப்பொம்மை அரசியல்வாதிகள் மௌனம் காப்பது நக்குண்டு நாவிழந்த கதையாகவுள்ளது.” – என்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு