அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபர் ஒருவரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் 72 வயது நபர் ஒருவர் கிளிநொச்சியில் வசித்து வந்த யுவதி ஒருவருடன் முகப்புத்தகத்தில் பழகி வந்த நிலையில், குறித்த நபர் அவுஸ்ரேலியாவில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயது யுவதியும் வவுனியாவிற்கு வருகை தந்து அவருடன் தங்கியுள்ளார். இருவரும் வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றிலும், குருமன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் சில நாட்கள் தங்கியிருந்துள்ளனர்.
இதன்போது குறித்த யுவதி அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த நபரின் கடனட்டையை பயன்படுத்தி வவுனியா பசார் வீதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் நகை கொள்வனவு செய்துள்ளார். சிறிது நாட்களின் பின் குறித்த நபர் அவுஸ்ரேலியா செல்ல ஆயத்தமாகிய போது அந்த யுவதியை அழைத்த போது அவர் கிளிநொச்சியில் இருந்து வரவில்லை. இதனால் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், அவுஸ்ரேலியா சென்ற நபர் குறித்த யுவதி தனது வங்கி அட்டையை மோசடி செய்து நகைகளை கொள்வனவு செய்துள்ளதாக அவுஸ்ரேலியாவில் இருந்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயது யுவதி கைது செய்டயப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.