அனைவரும் ஏகமனதாக என்னைத் தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைமை தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் பதவிக்காகக் கட்சிக்குள் போகவில்லை. முரண்பாடு இல்லாத நிலை ஏற்பட்டு அனைவரும் ஏகமனதாக தெரிவு செய்வார்களாக இருந்தால் போட்டியில்லாது அனைவரதும் ஒத்துழைப்போடு இணக்கப்பாட்டோடும் தெரிவு செய்தால் அதை நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் உள்ளேன்.
ஒருமனதாக முரண்பாடு இல்லாமல் தெரிவு செய்யப்பட்டால் நான் அந்தக் கடமையைச் செய்யக்கூடிய ஆற்றல் பொறுப்பு எனக்குள்ளது. அதற்காக நான் யாரையும் குறை சொல்லியோ யாரையும் கழுத்தறுத்தோ பதவிக்கு வர விரும்பவில்லை
தலைமைக்குத் தகுதியுடையவர் என என்னைப் பலர் கேட்கின்றார்கள், சொல்லுகின்றார்கள் என்பது உண்மையாக இருந்தாலும் கூட எங்களுடைய கட்சி ஒற்றுமையாகப் போக வேண்டும். ஒருமனதாகப் போக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. அவ்வாறு இணக்கப்பாடு வந்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை நான் ஏற்றுக்கொள்வேன்.” – என்றார்.