தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு முதலில் தீர்வினைப் பெற்றுத் தாருங்கள் நாம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை நாட்டினது பொருளாதார கேந்திர நிலையங்களாக மாற்றிக் காட்டுகின்றோம் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தினது ஒப்பந்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில்
தமிழ் மக்களுக்கான நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வரும் இனப்பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கும் பட்சத்தில் புலம்பெயர் தமிழர்கள் இந்த நாட்டிற்கு உதவிக்கரம் நீட்ட என்றும் தயாராகவே இருக்கின்றார்கள்
வெறுமனே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டினது பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வினை காண முடியாது
மிக நீண்டகாலமாக எமது நாட்டில் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்பட்டால் எமது வடக்கு கிழக்கு மாகாணங்களை நாம் பொருளாதார கேந்திர மையங்களாக அபிவிருத்தி செய்வதற்கு என்றும் தயாராக இருக்கின்றோம் எனவும் கூறினார்.