வெடுக்குநாறி மலையில் அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீளப் பிரதிஷ்டை செய்க! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Share

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையிலிருந்து அண்மையில் அகற்றப்பட்ட ஆதி சிவன் ஆலயத்தின் விக்கிரகங்களை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்று அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், விக்கிரகங்கள் இன்றி அங்கு வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாறி மலையிலிருந்த விக்கிரகங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் ஆகியன பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளமை தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சமர்ப்பணங்களை ஆராய்ந்த வவுனியா நீதிவான், வெடுக்குநாறி மலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யுமாறும், பூஜைப் பொருட்களைச் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் விக்கிரகங்கள் மீள பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டார்.

மேலும், பூஜை வழிபாடுகளுக்கு எவ்வித இடையூறுகளையும் விளைவிக்காதிருப்பதற்கும், அங்கு பாதுகாப்பு மேற்பார்வைகளை மாத்திரம் மேற்கொள்வதற்கும் பொலிஸாருக்கு நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்டது.

அத்துடன், வெடுக்குநாறி மலையிலிருந்த விக்கிரகங்கள் சேதப்படுத்தியமையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதைத் துரிதப்படுத்துவதற்கும் பொலிஸாருக்கு நீதிவானால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு