ஐ.நா மனிதவுரிமை சபையானது இனியும் பாசாங்கு செய்ய முடியுமா? கஜேந்திரகுமார் எம்.பி கேள்வி

Share

சிறிலங்காவின் மனித உரிமைகள்  ஆணைக்குழு நடுநிலையானது என ஐ.நா மனிதவுரிமை சபையானது இனியும் பாசாங்கு செய்ய முடியுமா? என ஐ.நாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐ.நா. மனிதவுரிமை சபையின் 52வது அமர்வில், விடயம் எட்டு தொடர்பான விவாதத்தின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (30) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுக்கையில்,

திட்டச் செயற்பாட்டுக்கான வியன்னா பிரகடனத்தின் 62வது பந்தியில், வலிந்து காணாமற்போகச் செய்தலை தடுப்பதற்கும், அவ்வாறான செயலைச் செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்குமாக – வினைத்திறன் மிக்க  – சட்டரீதியான – நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

நாடுகள், தமது ஆட்புல எல்லைக்குள் இவ்வாறான நடவடிக்கைகள் நடைபெறுவதாக நம்புவதற்கு இடமிருக்கும் போது, அவை தொடர்பில் – விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது அந்நாடுகளின் கடமை என்பதனையும், இக்குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் சம்பந்தபட்டவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் அப்பிரகடனம் மீள வலியுறுத்துகிறது.

இவ்வருடம் பெப்ரவரி மாதம், சிறிலங்காவின் மனிதவுரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் வடமாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட தரப்புகளான – வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசியற்கட்சியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரையும் சந்தித்தனர்.

இச்சந்திப்புகளின் போது, மேற்குறித்த 62வது பந்தியில் குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கு மாறாக – பழையவற்றை மறந்து விடுமாறும், பொறுப்புகூறலை வலியுறுத்த வேண்டாம் எனவும் முன்னைய குற்றச்செயல்கள்  பற்றிய விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கையாளும் எனவும், தாம் சந்தித்தவர்களிடம் பரப்புரையில் ஈடுபட்டதுடன், அழுத்தங்களையும் பிரயோகித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களும், தமிழ்ச் செயற்பாட்டாளர்களும் இவ்வாலோசனைகளை நிராகரித்து, சர்வதேச குற்றவியல் பொறுப்புக்கூறல் பொறிமுறையை வலியுறுத்திய போது, சிறிலங்கா மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேற்படி ஆணைக்குழு தனது களப்பயணத்தை முடித்துக் கொண்டு வெளியிட்ட அறிக்கையில், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு போன்ற உள்ளகப் பொறிமுறையினை அமைப்பதற்கு, தாம் சந்தித்த பாதிக்கப்பட்ட தரப்புகள் இணங்கிக் கொண்டதாக தவறாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் பல தவறான தகவல்கள் அவ்வறிக்கையில் காணப்படுகிறது.

இந்நிலையில்  – தலைவர் அவர்களே, சிறிலங்காவின் மனித உரிமைகள்  ஆணைக்குழு நடுநிலையானது என – ஐ.நா. மனிதவுரிமைச் சபையானது, இனியும் பாசாங்கு செய்ய முடியுமா? எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு