வவுனியா வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆலயத்தின் நிர்வாகத்தினரால் வவுனியாவில் நாளை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தினை திசை திருப்பும் நோக்குடன் சமூக வலைத்தளங்களில் பொய்யான பரப்புரைகளை சில விசமிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக ஆலயத்தில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் தொடர்பாக ஜனாதிபதியால் தீர்வொன்று வழங்கப்பட்டுள்ளது. எனவே நாளையதினம் இடம்பெறவிருந்த போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது என்றவகையில் பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை உரிமை கோரியே குறித்த போலிப்பரப்புரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த விடயத்தை முற்றாக மறுத்துள்ள ஆலயத்தின் நிர்வாகத்தினர் நாளையதினம் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளனர்.
நாளைய ஆர்ப்பாட்ட பேரணி காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடையவுள்ளது.
எனவே பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், சமய பெரியோர்கள், பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்புக்களும் பேதங்களை மறந்து குறித்த பேரணியில், கலந்து கொண்டு மத ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கையினை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.