வளம்கொழிக்கும் வன்னி மண்ணிலே வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள ஒலுமடு எனும் அழகிய சிறிய கிராமத்திலையே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. இந்த பழமை வாய்ந்த இந்த மலையின் வரலாறானது பல வரலாற்று சிறப்புக்களை காெண்டு காணப்படுகின்றது. ஆனால் இவ் ஆலயம் தற்போது பௌத்தர்களால் பௌத்த தலமாக்கப்பட்டு தமிழ்மக்கள் அங்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்கள் கைவிட்டு போகும் நிலையில் இன்று காணப்படுகின்றது.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அமைவிடம்.
வட மாகாணத்திற்குட்பட்ட வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள ஒலுமடு பாலமோட்டை கிராமத்திலே வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஒலுமடு என்னும் கிராமம் இங்குள்ள குளத்தில் ஒலு என்னும் தாவரம் நிறைந்து காணப்பட்டதனால் ஒலுமடு என்னும் காரணப் பெயரைப் பெற்றது. கிராமத்திற்கு கிழக்கே வெடுக்குநாறி மரங்களால் சூழப்பட்ட இயற்கையான சுமார் 200 தொடக்கம் 300 அடி உயரத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொண்மை வரலாற்றைக் காெண்ட மலையின் உச்சியிலையே வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
இம்மலையை சூழ உயரமான வெடுக்குநாறி மரங்கள் நிறைந்த மலையாக காட்சியளிக்கின்றது. இம்மலைக்கு,வடக்கே – நெடுங்கேணி கிராமமும், கிழக்கே – ஒலுமடு கிராமமும், தெற்கே – நொச்சிகுள் கிராமமும் மேற்கே – நயினாமடுக் கிராமமும் அமையப்பெற்றுள்ளது.
இக் கிராமங்களிற்கு மத்தியில் அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட அழகிய மலையாக இன்றும் வெடுக்குநாறிமலை காட்சியளிக்கின்றது. குடியிருப்பு பகுதியிலிருந்து ஏறக்குறைய மூன்றரை கிலோமீற்றர் காட்டுப்பாதை வழியாகவே இம் மலையை சென்றடைய முடியும். இவ் வெடுக்குநாறிமலை பரப்பளவில் சிறியதாக இருந்தாலும் இம் மலையை பார்க்கும்போது சிகிரியாவின் தோற்றத்தை ஒத்ததாகவே காணப்படுகின்றது.
தொண்மைச் சின்னங்களில் ஒன்றாக சிறப்புப்பெற்று விளங்கும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றினை சற்று முன் நகர்ந்து அலசிப்பார்போமானால் இவ் ஆலயம் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலே முழுவதுமாக அழிக்கப்பட்டு பின்னர் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தால் இலங்கை கைப்பற்றப்பட்ட பின்னரும் முற்றிலும் அழிக்கப்பட்டு பின்னர் மீள் எழுச்சிபெற்று நம் தமிழ் மூதாதையர்களால் திரும்பவும் வளர்க்கப்பட்டு, பின்னர் நடைபெற்ற உலகமகாயுத்ததிற்கு பின்னர் வெற்றிபெற்ற பிரித்தானிய அரசால் வெடுக்குநாறிமலையில் வெற்றிக்கொடி நாட்டப்பட்டு பின்னர் பிரித்தானியரிடம் இருந்து இலங்கை வெற்றி பெற்றதன் பிற்பாட்டில் மீளவும் இவ் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மீள் எழுச்சி பெற்று அங்குள்ள தெய்வங்களை நம் மூதாதையர்கள் வழிபட்டு வந்திருக்கின்றார்கள்.
வெடுக்குநாறிமலையின் தொன்மைச் சிறப்பு
இம் மலையை முதலில் வட்ட மலை எனவும் அழைத்து வந்துள்ளனர். இம்மலையை அண்டிய பகுதியில் நாகர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்றும், அதற்கு சான்றாக மலையின் வடகிழக்குப் பகுதியில் நாகர் குளமும் காணப்படுகின்றது. இம்மலை தற்போது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. இம்மலையின் அடிப்பகுதியில் இரண்டு குகைகள் காணப்படுகின்றன. ஒரு குகையானது இரண்டு மலைகள் ஒன்றோடு ஒன்று சாய்ந்த வண்ணம் காட்சியளிக்கின்றது. அதனிடையே ஆப்புக் கற்கள் காணப்படுகின்றன. இவை இரண்டு மலைகளும் ஒன்றோடு ஒன்று மோதுண்டு சிதைவடையாமல் வைக்கப்பட்டுள்ளன. இக்குகையில் அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இக்குகையில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இம் மலையின் உச்சியில் லிங்கேஸ்வரரரும் அருகில் அம்மனும் வீற்றிருக்கின்றார்கள். இதன் கீழ் மலையடிவாரங்களில் பிள்ளையார், வைரவர், முருகன், நாகதம்பிரான், வன்னித்தெய்வம் ஆகிய மூர்த்திகள் வீற்றிருக்கின்றனர். இம் மலையில் 2000, 3000 ஆண்டிற்கு முற்பட்ட பிராமி எழுத்து வடிவங்களும், மலையின் கீழ் சுரங்கப் பாதைகளையும் காணக்கூடியதாக உள்ளது.
மேலும் இம் மலையடிவாரத்தில் மஞ்சள் பூ பூக்கும் காட்டுக் கனகாம்பரமும், தீர்த்த தடாகமும் இருக்கின்றது. பிள்ளையார் வீற்றிருக்கும் பீடத்தில் குகையும், அதன் சுவரில் புராதன பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றது. இவ் எழுத்துக்கள் இயக்கர், நாகர் காலத்திற்குரியவையாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. (ஆய்விற்குரியது) நாகதம்பிரான் வீற்றிருக்கும் மலை நாகவடிவில் காட்சியளிக்கின்றது. இச் சிவ மூர்த்திகளை சுற்றி பண்டைய மனிதர்கள் வாழ்ந்ததற்குரிய ஆதாரங்கள், செங்கட்டிகள், நாகர்குளம் காணப்படுகின்றது. இம்மலை மேலே ரிஷிகள் இருந்து தவம் செய்ததாக இதன் வரலாறுகள் கூறுகின்றது.
போருக்கு பின்னைய நிலை
மேலும் இலங்கையில் நடைபெற்ற நாட்டின் அசாதாரண சூழ்நிலையில் இவ்வாலயத்திற்கு சென்று வழிபட முடியாத ஒரு நிலை காணப்பட்டது. அதாவது நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலைக் காணப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் இவ்விடத்திற்கு வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதன் பின்னர் லிங்கம், வைரவர், அம்மன் ஆகிய சிவ மூர்த்திகளின் தரிசனம் இங்குள்ள இவ்வாலயத்தை பராமரித்த மூதாதையர்களின் பரம்பரையை சேர்ந்த ஒருவருக்கும், பின்னர் ஊரிலுள்ள சிலருக்கும் கிடைத்ததன் பின்னர் விசேட பூசைகள் நடாத்தி வெள்ளிக்கிழமையிலும், பௌர்ணமி நாட்களிலும் விசேட பூசைகள் நடாத்தி மீண்டும் அங்குள்ள மக்களால் பல்வேறு சிரமங்களிற்கும், தடைகளிற்கும் மத்தியில் தொடர்ச்சியாக வழிபாடுகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.
இந்நிலையில் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மக்கள் மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் பல காரணங்களை கூறி தடைவிதித்திருந்தது. அத் தடைகளையும் தாண்டி இவ் ஆலயத்தில் மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வந்திருந்தனர். இந் நிலையில் 20018 ஆம் ஆண்டில் இலங்கை தொல்லியல் திணைக்களத்தினர், மற்றும் வனவளத்திணைக்களத்தினர் மீண்டும் மக்கள் இவ்வாலயத்திற்கு சென்று வழிபட தடைவிதித்திருந்தனர். இருந்தும் மக்களின் தொடர் எதிர்ப்பினால் தொல்பொருட் திணைக்களத்தினர் தற்காலிகமாக தடையினை நீக்கி வழிபாடுகளை மட்டும் மேற்கொள்ள அனுமதித்தனர் ஆனால் கோயிலை புனரமைக்கவோ , மறுசீரமைக்கவோ அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்படத்தக்கது.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள தெய்வங்கள்.
பழமையையும், தொண்மையையும் பாதுகாக்கும் வகையில் 2300 வருடங்களுக்கு முன்னர் வெடுக்குநாறி மலையில் பல்வேறு தெய்வங்கள் வைத்து வழிபடப்பட்டு வந்துள்ளது.
வெடுக்குநாறிமலையின் உச்சியில் சிவனும் (ஆதிலிங்கேஸ்வரர்) அதன் அருகில் அம்மனும் வீற்றிருக்கின்றார்கள். இம் மலையின் கீழ் அடிவாரங்களில் பிள்ளையார், வைரவர், முருகன், நாகதம்பிரான் ஆகிய மூர்த்திகளையும் வைத்து வழிபடப்பட்டு வருகின்றது. இதன் எல்லைத் தெய்வமாக கருதி இம்மலையில் ஐயனாரையும் வைத்து அப் பிரதேச மக்கள் வழிபட்டு வருகின்றார்கள்.
வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் காணப்படும் தொண்மைச் சின்னங்கள்.
வெடுக்குநாறிமலையில் ஆதிலிங்கேஸ்வரர் சிவ மூர்த்திகளைச் சுற்றி பண்டைய மனிதர்கள் வாழ்ந்ததற்குரிய பல ஆதாரங்கள் காப்படுகின்றது.
இம் மலையின் அடிவாரத்தில் மஞ்சள் பூ பூக்கும் காட்டுக் கனகாம்பரமும் தீர்த்த தடாகமும் அமைந்துள்ளது. அத்தோடு பிள்ளையார் வீற்றிருக்கும் பீடத்தில் குகை ஒன்றும் அதன் சுவரில் புராதன பிராமி வடிவ எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளதுடன் பல வகையான மூலிகைச் செடிகளும், அத்திவார கற்களும், செதுக்கப்பட்ட சூலம், தூண்தாங்கு கற்களும் காணப்படுகின்றது.
ஆலய சடங்கு முறைகள் (பூசைகள்)
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறுகின்ற சடங்கு முறைகள் பற்றிப் பார்க்கின்ற போது, இங்கு கிராமிய முறைப்படியும், ஆகமம் சார்ந்த முறையிலான வழிபாட்டு முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது பெரும்பாலான நாட்களில் கிராமிய முறைப்படியே பூசைகள் பூசாரியால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை, விசேட தின பூசைகளின் போது குருக்கள் வரவழைக்கப்பட்டு பூசை மேற்கொள்ளப்படுகின்றது. கிராமிய முறைப்படி பூசைகளை மேற்கொள்பவரை பூசாரி என அழைப்பார்கள். பூசாரி என்போர் பரம்பரைப் பரம்பரையாக இவ் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வோராகவே காணப்படுகின்றனர். .
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் சடங்கு முறைகளில் பண்டமெடுத்தல் எனும் சடங்கு சிறப்பானதாக காணப்படுகின்றது. அதாவது பண்டமெடுத்தல் என்பது வெள்ளைத்துணி விரிக்கப்பட்டு, அதில் பூசைப்பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருக்கும். பூசகர் மேளதாளத்தடன் ஆடி வந்து அப்பொருட்களை பக்தர்களிடம் ஒப்படைப்பார். அவ்வாறு எடுக்கப்படும் பொருட்கள் துணி பிடித்து கொண்டுவரப்பட்டு பண்ட பொருட்களில் பெரியமண்பானையும் கொண்டுவரப்படும். இதனை வழுந்து என்று குறிப்பிடுகின்றனர். இப்பானையை பூசகர் எடுத்து எட்டுத் திக்குமுள்ள பரிவாரங்களிடம் (காவற்தெய்வங்கள்) காட்டி நேர்ந்து அடுப்பில் வைப்பார். தொடர்ந்து பொங்கல் பொங்கி படையலுடன் பூசை நடைபெறும். மேற்கூறப்பட்ட தூளி பிடித்தல் என்பதும் பரிவாரங்களை அழைத்து காவல் செய்வதாகவே கொள்கின்றனர். பூசைகள் நிறைவடைந்ததும் வழி வெட்டுதல் என்ற கிரியை மூலம் பரிவாரங்களை மீள அனுப்புதலும், மடை சாத்தல் வைபவமும் இடம்பெறுகின்றது. மடை சாத்தப்பட்டு எட்டாம் நாள் மீண்டும் திறக்கப்பட்டு சாந்தி பூசையுடன் வழமையான பூசைகளை செய்கின்றனர். இவ்வாறான சடங்குமுறை வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றது
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மகிமை.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த சிவாலயமாக காணப்படுகின்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் சிவன் உட்பட அம்மன், பிள்ளையார், நாகதம்பிரான், ஐயனார் உட்பட பல்வேறு தெய்வங்களினாலும் பல அற்புதங்கள் நிகழ்ததாகவும், நிகழ்வதாகவும் அறியமுடிகின்றது. நாட்டில் நடைபெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னரும் இவ்வாலயம் ஆதரிப்பாரற்ற நிலையில் காணப்பட்டுள்ள சந்தர்ப்பத்திலேயே ஆதிலிங்கேஸ்வரரின் அற்புதமும், ஆசியும் முதலில் மதிமுகராசா மற்றும் பூபாலசிங்கத்திற்கும் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து கிராம மக்கள் பலருக்கும் ஆதிசிவனின் அருள் கிடைத்ததாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் தம்பிராசா மதிமுராசாவிற்கு ஆதிலிங்கேஸ்வரரினால் அற்புதமும், ஆசியும் கிடைத்துள்ளது. அதாவது இவர் வீட்டில் படுத்திருக்கும் போது இவரது கனவில் ஒரு அண்ணாவும், வயது வந்த ஐயா ஒருவரும் வெள்ளை உடுப்புடன் வந்து இவரை எழுப்பி, வா ஒருக்கா வெளியில் போட்டு வருவம் என்று கூப்பிட்டதாகவும், இவர் எங்க கூப்பிடினம் என்று தெரியா விட்டாலும் தனது அண்ணாவும், ஐயாவும் என்று எண்ணி அவர்களுடன் சென்றுள்ளார். நேரே ஒற்றையடி பாதையில் கஞ்சல், குப்பைகள் வழியாக கூட்டி வந்து ஒரு ஓலை கொட்டிலில் ஒரு கல்லடியில் தன்னை இருக்கச் சொல்லி இருத்தியதால் தான் இருந்ததாகவும், அதில் இருந்து பார்க்கும் போது வெள்ளை சாரி உடுத்தவாறு நிறைய அம்மாக்களையும், நீத்துக்காய், நீத்து பூசணிக்காய், புடலங்காய் அரிசி மற்றும் மறக்கறிகள் பல இருப்பதையும் கண்டுள்ளார். பின்னர் தன்னை தேத்தண்ணீ குடிக்க சொன்னதாகவும், தான் வேண்டாம் என்று கூறவும் இல்லை குடியுங்கோ என்று சிரட்டை போன்ற சின்ன மண்சட்டி பானை ஒன்றில் தந்தாகவும், தான் அதை தன்னுடைய கனவில் குடித்ததாகவும், குடித்ததன் பின்னர் நல்லெண்ணெய் போத்திலொன்றை கையில் தந்ததாகவும் தான் அதனை கையில் வேண்டியவுடன் எழுப்பி கூட்டிச் சென்று பிள்ளையார், அம்மனை காட்டி, பின்னர் மேலே ஏறி சிவபெருமானைக் காட்டியதுடன் மேலே இன்னுமொரு இடத்தில் கல்லில் சூலம் கீறியவாறு காணப்பட்டதுடன் அவ்விடத்திற்கு ஏற முடியாமல் இருந்ததாகவும், அவர்கள் தன்னை கையில் பிடித்து ஏற்றி விட்டதாகவும் தெரிகிறது. இவ்வாறு எல்லா தெய்வங்களையும் காட்டி நல்லெண்ணெய் வைத்து முடிய திரும்ப இருந்த இடத்திற்கு கூட்டி வந்து இருக்கச் சொன்னதாகவும், இருந்தவுடன் எல்லா இடத்தையும் காட்டியாச்சுது, இனி செய்வியோ என்று தன்னை கேட்க தான் உடனேயே ஓம் என்று சொன்னதாகவும், கையில் ஒரு வளையமும் பிரம்பும் தந்ததாகவும் அதனை தான் பெற்றுக் கொண்டதாகவும், அப்போது இதுதான் இனி உனக்குரிய ஆயுதங்கள் என்று கூறி இதுதான் நீ பூசை செய்ய வேண்டிய இடம் இனி வழமையாக பூசை செய்து வர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதே போன்று ஊரில் உள்ளவர்களுக்கு ஆதிலிங்கேஸ்வரர் தென்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே ஊரில் உள்ளவர்களுடன் கதைத்து பல்வேறு சிரமங்களிற்கு மத்தியில் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் அறியமுடிகின்றது. இவ்வாறு ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளத் தொடங்கியதன் பின்னரே கிராமங்களிலும் செழிப்பு நிலையைக் காணமுடிகிறது. ஒருவருக்கு நோய்கள் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் இவ் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று திருநீறு போடுவதன் மூலம் நோய்கள் நீங்கும் என்ற ஒரு நம்பிக்கையும் இங்கு வாழ்கின்ற மக்களிடையே காணப்படுகின்றது.
ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள தெய்வங்கள்
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இந்துசமயத்தை பிரதிபிலிக்கும் வகையில் பல்வேறு தெய்வங்ள் இற்றைக்கு 2300 வருடங்களுக்கு முன்பிருந்தே வழிபட்டதற்கான ஆதாரங்கள் பல இம் மலையில் காணப்படுகின்றது. அந்தவகையில் அதன் பழமையையும், தொன்மையையும் பாதுகாக்கும் வகையில் இன்றும் பல்வேறு தெய்வங்கள் வைத்து வழிபடப்பட்டு வருகின்றது. இவ்வாறு தெய்வங்களை வைத்து வழிபடுவதன் மூலம் பிரதேசத்திலும், மக்களது பண்பாட்டிலிலும் பல்வேறு செழிப்புத் தன்மைகள் இடம்பெறுவதாக இம் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
பிள்ளையார்
இந்துக்களாகிய நாம் எந்த செயலையும் செய்யத் தொடங்கு முன்னர் பிள்ளையாரை வழிபடுவதை அன்றிலிருந்து இன்றுவரை வழக்கமாகக் கொண்டுள்ளோம். பிள்ளையாரை வழிபட்டு தொடங்கும் செயல்கள் வெற்றிகரமாக அமையும் என்பது நமது நம்பிக்கை. அதனடிப்படையில்தான் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் என்று சொல்லப்படுகின்ற பழமை வாய்ந்த ஆலயத்தில் மலையடிவாரத்தில் குகைக்குள்ளே பிள்ளையார் வைத்து வழிபடப்பட்டு வருகின்றது.
வெடுக்குநாறிமலையில் காணப்படும் தொல்லியல் சின்னங்கள்
இம்மலையிலும், மலையை சுற்றிய பகுதிகளிலும் பழமையை பறைசாற்றும் வகையில் பல்வேறு தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. தொல்லியல் சின்னங்கள் எனும் போது இற்றைக்கு நூறு ஆண்டுகளிற்கு முற்பட்டவை அனைத்துமே தொல்லியல் சின்னங்களாக பார்க்கப்படும். இவ்வாறான தொல்லியல் சின்னங்களினூடாக கடந்த காலம் பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்த கொள்ள முடியும். குறிப்பாக கடந்த காலத்து எழுத்து, மொழி, பண்பாடு, பாவனைப் பொருட்கள், வழிபாட்டு முறைகள், உணவு மற்றும் பழக்கவழக்கம் என அனைத்து அம்சங்களை அறிந்து கொள்வதில் இத் தொல்பொருட் சின்னங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அந்தவகையில் இங்கு காணப்படுகின்ற தொல்லியல் சின்னங்கள் பின்வருமாறு,
1. குகைகள்
வெடுக்குநாறிமலையில் கற்புருவங்கள் (நீர்புகா முகப்புக்கள்) பொழியப்பட்ட ஒன்பது குகைகளை காணமுடிகின்றது. அவற்றில் இரண்டு மிகப் பெரியவையாகவும், ஏனையவை சிறியகுகைகளாகவும் காணப்படுகின்றன. குகையின் முகப்பிலேயே பிராமிய எழுத்துப்பொறிப்புக்கள் காணப்படுகின்றமையும் சிறப்புக்குரியதாகும். இவ் ஒன்பது குகைகளில் ஒன்றாக நாகப் பாறை காணப்படுகின்றது. இப்பாறையின் பிளவுகளிலிருந்து நாக பாம்பு ஒன்று வாழ்ந்து வருவதாகவும், தாம் வைக்கும் பாலினை அருந்தி வருவதாகவும் கோவில் பூசகர் மற்றும் அங்கு சென்று வரும் பக்தர்கள் மூலம் அறிய கிடைக்கின்றது.
2.சுரங்கப் பாதைகள்
இம் மலையில் உள்ள பெரிய குகையில் சுரங்கப்பாதைகள் காணப்பட்டாலும் தற்போது அது மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அதாவது இம் மலைக்கு கீழ் ஒரு இடம் இருப்பதை நிலத்திலுள்ள சத்தத்தை வைத்துப் பார்க்ககும் போது, கீழ் ஆதாளத்தில் உள்ள ஓர் பாதாளம் இருப்பது போன்று எண்ணத்தோன்றுகின்றது. எமது முன்னோர்கள் அன்றைய காலத்தில் கூறிய வார்த்தைகளாக பண்டாரவன்னியன் ஆட்சி செய்த காலத்தில் இம் மலையிலிருந்து ஆதாளத்தினூடாக சென்று கற்சிலைமடுவில் வெளிப்பட்ட நேரத்தில்தான் அவருடைய உயிர் சண்டையின் போது பிரிந்ததென்றும், அந்த இடத்தில்தான் கற்சிலைமடுவில் அவருக்கு சிலை வைத்திருப்பதாகவும் எமது மூதாதையர்களினால் கூறப்படுகின்றது.
3.கேணி
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிதிர் கடமைகளை செய்வதற்கும், ஏனைய நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இயற்கையான கற்பாறையில் கேணி போன்ற ஒரு அமைப்பு பொழியப்பட்டுள்ளது. பிதிர் கடமைகளை செய்வதற்கு யாழ்ப்பாணத்தில் கீரிமலை, கிழக்கில் அமிர்தகழி ஆலயங்கள் முக்கியம் பெறுவது போல இம் மக்களிடையே இவ்வாலயம் பிதிர்கடமைகளை செய்வதற்குரிய சிறந்த ஆலயமாக பார்க்கப்படுகின்றது. இது மனிதனுடைய பாதத்தை ஒத்த வகையில் காணப்படுகின்றது. அதாவது சிறிய 5 – 6 அடி அளவில் மதிக்கத்தக்க ஒரு நீர் ஊற்று என்று சொல்ல முடியும். இதில் எக்காலத்திலும் வற்றாது நீர் காணப்படும் என இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
4.மூலிகைச் செடிகள்
எங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த இடங்களில் எங்கு பார்த்தாலும் மூலிகை மரங்கள் காணப்படுகின்றது. அந்தவகையில் வெடுக்குநாறிமலையில் 18 மூலிகைகள் காணப்படுவதுடன், இன்றும் இங்கு காணப்படுபவர்களின் நோய்களை நீக்குவதற்காக இவை பயன்படுகின்றமை சிறப்புக்குரியதாகும்.
5.மூலிகை
மூலிகை அரைப்பதற்குரிய இடம்
கேணியின் அருகே கிட்டத்தட்ட ஆறு அங்குல விட்டமும் பத்து அங்குல அகலமும் கொண்ட வட்ட வடிவில் மிக நேர்த்தியாக பொழியப்பட்ட இரண்டு குழிகள் காணப்படுகின்றது. இது முற்காலத்தில் மூலிகைகள் அரைப்பதற்குப் பயன்படுத்திய கல்வங்கள் அல்லது கல்லுரல்களாக இருக்கலாம். இவை போன்ற சம அளவுடைய குழியொன்று தந்திரிமலையில் இருப்பது இங்கு சுட்டிகாட்டத்தக்கது.
6.அத்திவாரக் கற்கள்
நேர்த்தியாக கற்களில் சதுர வடிவில் பொழியப்பட்ட கற்றூண்களை தாங்கும் அத்திவாரக் கற்கள் கிட்டத்தட்ட 10 -12 அடி தூரத்தில் அடுக்கப்பட்டு உள்ளன. அவை காட்டுக்குள் நீண்டு செல்கின்றன. அவற்றில் பல கற்கள் மண்ணுக்குள் புதைந்து காணப்படுகிறது. அவை இங்கு ஒரு கட்டிடம் இருந்ததற்கு சான்றாகும். சிதறிக் கிடக்கும் செங்கற்கள் மற்றும் மட்பாண்டத் துண்டுகளின் மூலம் அங்கு செங்கற்கள் மற்றும் மட்பாண்ட பயன்பாடு இருந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது.
7.செதுக்கப்பட்ட சூலம்
தற்போது ஆலயத்தில் சூலம் வைத்து வழிபடும் அருகிலுள்ள குன்றின் மேற்பகுதியில் சூலம் செதுக்கப்ட்டுள்ளது. அதனை அப்பாறைக்கு மேல் ஏறிச் சென்றால் மட்டுமே பார்க்கமுடியும். அங்குள்ள பெரிய குன்றில் தற்போது சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துள்ள பகுதியில் சில வித்தியாசமான பூசைக்குப் பயன்படுத்தப்படும் சக்கரங்களும், முத்திரைகளும் பொறிக்கப்பட்டுள்ளது.
8.தூண்தாங்கு கற்கள்
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய அமைந்துள்ள பகுதியினுள் தூண்தாங்கு கற்கள் சில காணப்படுகின்றன. அதாவது ஒற்றை கருங்கற்களின் நடுவில் குழி உருவாக்கப்பட்ட கற்கள் பல காணப்படுகின்றன. இவை கற்றூண்கள் நிறுத்தப்பயன்படும் தூண்தாங்கு கல் வகையைச் சேர்ந்தவை. மலைப்பாங்கான பிரதேசங்களில் கட்டிடங்களை குறிப்பாக ஆலயங்களை நிறுவுதற்கு இவை துணைபுரிபவை. அந்தவகையில் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள வெடுக்குநாறிமலைப் பகுதியில் இத் தூண்தாங்கு கற்களை அவதானிக்க முடிந்தது.
9.நாகர்குளம்
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் அருகில் ஒரு குளம் காணப்படுகின்றது. நாகர் காலத்தில் கட்டப்பட்டதால் நாகர்குளம் என அழைக்கப்படுவதாக இப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றதுடன், இம் மலையிலிருந்து இக் குளத்திற்கு நீர் செல்வதாகவும் அறியமுடிகின்றது.
தற்போதைய ஆலயத்தின் நிலை
2018 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று வழிபட வழிபாட்டுரிமை வழங்கப்பட்ட போதிலும் வழிபாட்டிற்கு செல்லும் மக்கள் சுகந்திரமாக வழிபட முடியாமலிருந்தது. ஏனெனில் பொலிஸார், புலனாய்வாளர்கள், வனவள திணைக்களத்தினரின் அச்சுறுத்தல்கள் மக்கள் வழிபாட்டில் இடையூறாக இருந்தது. அன்று தொடங்கி இன்றுவரை மக்கள் நினைத்த நேரங்களில் சென்று வழிபட முடியாத நிலையே காணப்படுகின்றது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு வெடுக்குநாறி ஆலயத்தின் வருடாந்த உற்சவ காலத்தில் அதனை நிறுத்தும் நோக்கில் தொல்லியல் திணைக்களத்தினர் மற்றும் நெடுங்கேணி பொலிஸாரினால் வவுனியா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு சரியான ஆதாரம் இல்லாமையால் 16.09.2020 அன்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு ஆலய நிர்வாகத்தினர் உற்சவத்தினை மேற்கொள்ள யாரும் இடையூறு செய்ய கூடாதென நீதவானால் பணிப்பு விடப்பட்டது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் மீண்டும் வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஆகியோர் மீது நெடுங்கேணி பொலிஸாரால் வழக்கு தொடுக்கப்பட்டு 09.10.2020 அன்று 18 சட்டதரணிகளின் கடும் வாதபிரதிவாதங்களுக்கு பின்னர் ஆலய நிர்வாகத்தினர் மூவருக்கும் தலா 50,000 சரீர மேலதிக பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியதுடன் 23.10.2020 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கு அன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டு மீண்டும் 06.11.2020 க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கொவிட் பரவல் காரணமாக 06.11.2020 அன்று எடுத்துக்கொள்ளப்பட இருந்த வழக்குகள் தை மாதம் 2021 க்கு தவணையிடப்பட்டிருந்த நிலையில் தாெல்லியல் திணைக்களம் சார்பாக ஆஜராகிய சட்டதரணிகள் வழக்கினை முன்னமே அழைக்குமாறு நீதிமன்றில் நகர்தல் பத்திரம் ஒன்றை முன்நகர்த்தியிருந்ததனை தாெடர்ந்து வழக்கு 11.12.2020 வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. எனவே வழக்கு திகதி மாற்றப்பட்டதை ஆலய நிர்வாகத்தினருக்கு நெடுங்கேணி பொலிஸார் தெரியபடுத்தவில்லை என ஆலய நிர்வாகத்தினர் குறித்த வழக்கிற்கு சமூகமளிக்கவில்லை. அன்றைய தினம் அவர்களுக்கான பிணையும் ரத்தாகியிருந்தமையால் அவர்களுக்கு பிடியாணை வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் தாெடர்ந்தும் ஐந்து நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் பொலிசாரால் வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமையால் இவ் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் பல்வேறு தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு வழக்குகள் தொடர்வதும் ஆதாரம் இன்மையால் தள்ளுபடி செய்யப்படுவதுமாக இருந்தாலும் குறித்த ஆலயத்தில் மக்கள் இன்றுவரை செல்ல முடியாத சூழலும், உற்சவங்களையோ, சிவனுக்குரிய விரத நாட்களையோ சரியா கொண்டாட முடியாத நிலையிலையே இன்று இருக்கின்றது. கடந்த இரு வருடங்களாக இவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டு குறித்த ஆலயத்தில் தமிழ்மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத அவல நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ் ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாகவும் அதன் தற்போதைய நிலமை தொடர்பாகவும் குறித்த ஆலயத்தின் பூசாரியார் தம்பிராசா மதிமுகராசா கருத்து தெரிவிக்கையில்,
அன்றொருநாள் வீட்டில் படுத்திருக்கும்போது எனக்கு கனவொன்று வந்தது. கனவில் ஒரு அப்புவும் , ஒரு அண்ணையும் வெள்ளை உடுப்புடன் வந்து என்னை எழுப்பி கூட்டி சென்று கோயிலினை சுற்றி காட்டி விதிமுறைகளையும் கூறி நீங்கள் தான் பூசாரி நீங்களே இவ்வாலயத்திற்கு பூஜையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். அதன்பின் கனவில் தோன்றியதன் பின்னரே நான் அந்த முறைகளின் படி பூஜைகளை மேற்கொண்டு வந்தேன்.
இக் கோயிலில் மேலே சிவபெருமானும், அதற்கு கீழே அம்மனும், பிள்ளையாரும், மலைக்கு ஏறும் படியடியில் நாகதம்பிரானும் வீற்றிருக்கின்றார்கள். இப்போதும் கோயிலடியில் நாகதம்பிரான் (பாம்பு) இருக்கின்றது. அதனை மக்கள் வழிபட்டு செல்வார்கள். இங்கு வீற்றிருக்கும் நாகதம்பிரானுக்கு நாங்கள் வைக்கும் பாலை பாம்பு குடித்துவிட்டு செல்லும்அற்புதம் இன்றும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
நான்காவது சந்ததியில் கடந்த எட்டு வருடங்களாக நான் பூஜை செய்து வருகின்றேன். இவ்வாறு பூஜை மேற்கொண்டு வரும்போது தொல்பொருள், பொலிஸ், இராணுவத்தினர் வந்து பார்ப்பார்கள். கோயில் நன்றாக பூஜையும் , அபிவிருத்தியும் மக்கள் ஆதரவாயும், பூஜைகளும் சிறப்புற இடம்பெறும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், விஷேட தினங்களிலும் பூஜை மேற்கொள்வோம் தற்போது மூன்று வருடங்களாக கோயிலுக்கு செல்ல கூடாது, மக்கள் செல்ல கூடாது, பூஜை மேற்கொள்ள கூடாது என்றே நெடுங்கேணி பொலிஸாரால் கூறப்பட்டிருக்கின்றது.
ஆரம்பத்தில் பொலிஸ், இராணுவத்தினர் ஆலயத்திற்குள் வந்து வழிபட்டு செல்வார்கள். பின்னர் மலையில் எழுத்துக்கள், நீர்த்தடாகம் எல்லாம் இருக்கிறது. அதனை ஆராய்ச்சி செய்ய போவதாக கூறினார்கள். அப்போது நான் கூறினேன். எங்களுக்கு பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள இடையூறு ஏற்படுத்தாமல் மேற்கொள்ள வேண்டும் என்று.பின்னர் எங்கள் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அப்படி இருந்த போதும் நீதவானால் பூஜை செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பின்னர் பொலிஸாருக்கும், கோயில் நிர்வாகத்திற்குமிடையே சில முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது. சப்பாத்துகளுடன் மலையில் (கோயில் வளாகத்திற்குள்) ஏறியமை, மாமிச உணவுகளை உண்டமை போன்ற செயற்பாடுகளால் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதனை வைத்து தொல்பொருள் திணைக்களத்தின் துணையுடன் நெடுங்கேணி பொலிஸார் எங்கள் மீது வழக்கினை தொடர்ந்து கோயிலுக்கு பூஜை செய்யவும், அவ் வளாகத்திற்குள் செல்லவும் கடந்த மூன்று வருடங்களாக தடை செய்யப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் நீதிமன்றில் சட்டத்தரணிகள் வாதாடி ஒருமுறை 10 நாள் திருவிழாவினை மேற்கொள்ள அனுமதி கிடைத்திருந்தது. பின்னர் ஆலய வளாகத்தினை நாங்கள் சேதப்படுத்தியதாக கூறி பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் மூலம் வழக்கொன்றினை பதிவு செய்து பூஜை செய்யவிடாது தடுத்து வைத்திருக்கிறார்கள்.
இப்படி தொடர்ச்சியாக வழக்கு பதிவு செய்வதும் நீதிமன்றுக்கு வழக்குக்கு சென்றாலும் ஒவ்வொரு தடவையும் தவணையிடப்படுகின்றது. அடுத்த வழக்கு 27.07.2022 ஆம் ஆண்டு அன்றையதினம் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவித்தார்.
பாலநாதன் சதீஸ்