வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை மீது மரம் முறிந்து விழுந்தமையால் மயிரிழையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாய்மார் உயிர் தப்பியுள்ளனர்.
இன்று (24) மாலை வவுனியாவில் மினி சூறாவளியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2225 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகைக்கு மேலே அருகில் இருந்த மரம் ஒன்றின் பாரிய கிளை முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் போராட்ட கொட்டகையின் ஒரு பகுதி தகரக் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், மரக்கிளைகளும் போராட்ட கொட்டகைக்குள் விழுந்துள்ளது. இவ் அனர்த்தத்தால் போராட்ட கொட்டகை பகுதியிளவில் சேதமைடைந்துள்ளது.
குறித்த அனர்த்தத்தின் போது போராட்ட கொட்டகைக்குள் 5 தாய்மார் இருந்த போதும் அவர்கள் எந்தவித பாதிப்புமின்றி மயிரிழழையில் உயிர் தப்பியுள்ளனர். அவர்களது உடமைகள் சில உடைந்தும், மழையில் நனைந்தும் சேதமடைந்துள்ளன.