அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித நேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு ‘தேசிய மனித நேய விருது’ என்ற உயரிய விருது அந்த நாட்டின் ஜனாதிபதியால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
மனிதநேயம் பற்றிய தேசத்தின் புரிதலை ஆழப்படுத்திய மற்றும் வரலாறு, இலக்கியம், மொழிகள், தத்துவம் மற்றும் பிற மனிதநேயப் பாடங்களில் குடிமக்களின் ஈடுபாட்டை விரிவுபடுத்திய தனிநபர்கள் அல்லது குழுக்களை இந்த விருது கௌரவிக்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘தேசிய மனித நேய விருது’ வழங்கும் விழா வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
அப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை மிண்டி கலிங்குக்கு இந்த உயரிய விருதை ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கி கௌரவித்தார்.
வேரா மிண்டி சொக்கலிங்கம் என்ற இயற்பெயரை கொண்ட 43 வயதான மிண்டி கலிங், நடிகை, நகைச்சுவையாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர்.
மிண்டி கலிங்கை தவிர்த்து மேலும் 11 பேருக்கு ஜோ பைடன் இந்த உயரிய விருதை வழங்கினார்.
விருது வழங்கும் விழாவில் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.