துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இத்தாலியின் கலபிரியா பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் 2 குழந்தைகள் உள்பட 76 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து இத்தாலி கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இத்தாலிக்கு வந்து கொண்டிருந்த சில அகதிகள் நடுக்கடலில் சிக்கித்தவித்ததாக கடலோர காவல் படையினருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் நடுக்கடலில் படகுகளில் சிக்கித்தவித்த அகதிகளை பத்திரமாக மீட்டனர்.
இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.