உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்திய ரஷியா, கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை கைப்பற்றியதுடன், தொடர்ந்து முன்னேறி வருகிறது.
ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்த போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்குகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
நேற்று இரவு முழுவதும் சுமார் 7 மணி நேரம் அலை அலையாக ஏவுகணைகளை வீசியதில், குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
லிவிவ் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏவுகணை தாக்கியதில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. இதில் 5 பேரும், தினிப்ரோ பிராந்தியத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘ஆக்கிரமிப்பாளர்களால் பொதுமக்களை மட்டுமே அச்சுறுத்த முடியும், அவ்வளவுதான் ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் அவர்களுக்கு உதவாது’ என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.