ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.3 போட்டி முடிந்த நிலையில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (9-ந் தேதி) தொடங்குகிறது.
இந்த டெஸ்டை `டிரா’ செய்தாலே இந்தியா தொடரை வென்றுவிடும். ஆனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு இந்த டெஸ்டை வெல்வது கட்டாயமாகும்.
தோற்றாலோ அல்லது டிரா செய்தாலோ இலங்கை-நியூசிலாந்து தொடரை பொறுத்து வாய்ப்பு அமையும்.
அதற்கு இடம் அளிக்காத வகையில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும்.
இந்தூர் டெஸ்டில் இந்திய வீரர்களின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஆஸ்திரேலிய அணி 2 நாள் மற்றும் ஒரு செசனில் இந்தியாவை எளிதில் வீழ்த்தி இருந்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாட வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர்.
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் ஸ்ரீதர் பரத்துக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24 வயதான அவர் டெஸ்டில் அறிமுகமாகுகிறார். பரத் கடந்த 3 டெஸ்டிலும் எதிர்பார்த்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தவில்லை.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி இந்த தொடரில் அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவர் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார்.
ரோகித்சர்மா, அக்ஷர் படேல் மட்டுமே நிலையாக ஆடி வருகிறார்கள். பந்துவீச்சில் ஜடேஜா (21 விக்கெட்), அஸ்வின் (18 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர்.
கடந்த டெஸ்டில் ஆடாத முகமது ஷமி நாளை இடம் பெறுவார். உமேஷ் யாதவ் கழற்றி விடப்படுவார். ஆஸ்திரேலியா கடந்த போட்டியை போலவே இந்த டெஸ்டில் வென்று தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும்.
கெப்டன் கம்மின்ஸ் 4-வது டெஸ்டிலும் ஆடமாட்டார்.சொந்த பணி காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளார். இதனால் ஸ்டீவ் சுமித் இந்தப் போட்டியிலும் கேப்டனாக பணியாற்றுவார்.
ஆஸ்திரேலிய அணியின் வெட்டிங்கில் லபுஷேன் (178 ரன்), உஸ்மான் கவாஜா (153), ஹேண்ட்ஸ் ஹோம் ஆகியோரும், பந்து வீச்சில் நாதன் லயன் (19 விக்கெட்), மர்பி (11), மேத்யூ குன்மேன் (8) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 106-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 105 போட்டியில் இந்தியா 32 டெஸ்டிலும், ஆஸ்திரேலியா 44 டெஸ்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
28 போட்டி `டிரா’ ஆனது. ஒரு டெஸ்ட் `டை’ ஆனது. நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.