இன்று சர்வதேச மகளிர் தினம்! – பெண்மையைப் போற்றுவோம்

Share

சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆ ம் திகதி ஒவ்வொரு கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகள் தான் என உலகுக்கு உரத்துக்கூறும் அதே வேளை அவர்களின் சம உரிமையுடன் மரியாதையோடு எந்தவித வேறுபாடுமின்றி வாழ வழி செய்ய அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நாள் அனைவராலும் பின்பற்றப்படுகிறது.

இன்றைய நாள் நாம் நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும்போது பல பெண்கள் பல சாதனையாளர்களாக உலகமே வியந்து பார்க்கும் வண்ணம் வரலாறு படைத்திருப்பதை காண்கின்றோம். பெண்களால் முடியாது என்று சொல்லப்பட்ட துறைகளில் பெண்கள் புகுந்து விளையாடுவதுடன் விமானிகளாக, விஞ்ஞானிகளாக, விண்வெளி ஆராச்சியாளர்களாக, நாட்டின் தலைவர்களாக, விவசாயிகளாக, தொழில்நுட்ப வல்லுநர்களாக சாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

என்னதான் ஒரு சில பெண்கள் இப்படி வியந்து பார்க்கும் நிலையில் இருந்தாலும் எல்லா பெண்களுக்கும் சமத்துவம் கிடைத்துள்ளதா என்று பார்த்தால், பல பெண்கள் கல்வி கற்கும் வாய்ப்போ அல்லது வன்முறையற்ற சுதந்திரமான,கௌரவமான வாழ்க்கை வாழும் நிலையோ இன்னும் உருவாக்கபட இல்லை என்பது தான் நிஜம்.

எவ்வாறு இந்த சர்வதேச தினம் உருவானது? 1908- ம் ஆண்டு கிட்டத்தட்ட 15,000 பெண்கள் மிக தைரியத்தோடு நியூயார்க் வீதிகளில் இறங்கி, நல்ல சம்பளத்திற்காகவும்,ஒரு சிறந்த வேலை செய்யும் சூழலுக்காகவும், தமது வாக்களிக்கும் உரிமைகளுக்காகவும் போராடினார்கள்.

அடுத்த ஆண்டு அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி வேலைநிறுத்தம் செய்தவர்களைக் கௌரவிப்பதற்காக ஒரு தேசிய மகளிர் தினத்தை அறிவித்ததையடுத்து, 1901-ல் அது உலக மயமானது. 1911-ல் முதலாவது சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

முதலாவது பெண்களுக்கான சர்வதேச தினம் முன்னெடுக்கப்பட்டு நூற்றிப்பத்து வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஆனால் இன்றும் பெண்கள் தமது உரிமைகளுக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.

பெண்களின் புரட்சிகர போராட்டங்களின் விளைவாக பெண்கள் வாக்குரிமை, காணி உரிமை, கல்வி உரிமை போன்ற உரிமைகளைப் பெற்று சுதந்திரத்தை சுவீகரித்தாலும், இன்றும் அவர்கள் தமது சம உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றார்கள்.

இன்றும் இந்தியா, கம்போடியா, பாகிஸ்தான், நேபால், யெமன் , பப்புவா நியூ கினி, ஹெய்டி, எகிப்து, குவாத்தமாலா, போன்ற நாடுகளில் ஆண்களின் கல்விற்கு முன்னுரிமை அளிக்கப் படுவதோடு, பெண்கள் இரண்டாம் தரமாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் உயர் கல்வி முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் ஆண்டு வரை மட்டுமே இந்நாட்டில் பெண்கள் கல்வியை தொடர முடியும்.

கல்வியில் பாலின சமத்துவமின்மையானது, பெண்களின் வளர்ச்சியை பாதிப்பதோடு அவர்களின் சுயமதிப்பையும் பாதிப்பதாகவும் அது அமைகின்றது.

சமமான கல்வியை பெறுதல் என்பது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று என்பதை கடந்து சமூக மாற்றத்திக்கான முக்கிய காரணியாக அமைகின்றது. பொருளாதார ரீதியில் பெண்கள் முன்னேறி ஒரு நிலையான மேம்படுத்தப்பட்ட வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு கல்வி இன்றியமையாத ஒன்றாகின்றது. பெண்கள் சுதந்திரமாக கல்வி கற்கும் பாலின சமத்துவத்தை உருவாக்கும் கடமை சமூகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

அடுத்த மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் பலவடிவங்களில் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கின்றது, ஒரு சில பெண்கள் பாதுகாப்பாக இந்த சமூகத்தில் வாழ முடிந்தாலும் பல பெண்கள் பல சவால்களுக்கும், வன்முறைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய சூழலே இந்த சமூகத்தில் உள்ளது.

2020 இல் வெளிவந்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி கிட்டத்தட்ட 47,000 பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களாலே கொல்லப்படுகிறார்கள். தங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் அடிக்கப்படுவதும் , அடிமைகளாக நடத்தப்படுவதும் கொலை செய்யப்படுவதும் சமூகத்தில் ஏற்று கொள்ள முடியாத கொடுமையாகும். ஒரு குடும்பம் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பாக இருப்பதுடன் அவள் முன்னேற்றத்திற்கு உறுதுனையாய் இருப்பது அவசியமாகும். கிட்டத்தட்ட 47, நாடுகளில் கணவன்மார்களின் துஸ்பிரயோகத்தில் இருந்து பெண்களை பாதுகாக்க இதுவரை எந்த சட்டங்களும் உருவாக்கப்படவில்லை. கிட்டத்தட்ட 45, நாடுகளில் குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டங்கள் கொண்டுவரப்படவில்லை.

இதுவரை பெரும்பான்மையான நாடுகளில் பெண்களுக்கு சமனான ஊதியத்தை நடை முறைப்படுத்தவில்லை. ஒரே துறையில், நிகரான கல்வியை பெற்று , ஆணுக்கு நிகராக அவர்கள் கடினமாக உழைத்தாலும் ஆணுக்கு ஒரு ஊதியமும் பெண்ணுக்கு ஒரு ஊதியமும் வழங்கப்படுவது அவர்கள் உழைப்பை சுரண்டுவதற்கு சமமாகும்.
ஆகவே சமூகம் என்ற அடிப்படையில் நம் அனைவருக்கும் உள்ள கடமை என்ன? ஒரு பெண் நமது சமூகத்தில் பாதுகாப்பாக கௌரமாக வாழ முடிகிறதா? ஒரு பெண் அல்லது ஒரு பெண் குழந்தை வன்முறைக்கு முகம் கொடுக்கும் போது சமூகம் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றது? சமூகத்தில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் தங்கள் பெண்குழந்தைகள் ஒவ்வொருவரும் கல்வி கற்று, துணிவாக முடிவெடுக்கும் ஒரு தலைமைத்துவ பண்பு கொண்ட ஒரு பெண்ணாக பிரகாசிக்க வேண்டும் என்று நினைத்தாலே பல மாற்றங்கள் தானாக உருவாகும்.

பாடசாலைகளில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, வன்முறைகளை எவ்வாறு தடுக்க முடியும் என்பதை அனைத்து ஆண் பெண் மாணவர்களுக்கும் போதிக்க வேண்டும். துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை எவ்வாறு அடையாளம் காண முடியும் என்பதை கற்றுக்கொடுப்பதுடன், அப்படி முகம் கொடுக்கும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

சிறு வயதில் இருந்தே சக மாணவர்களை மதிக்க கற்றுக்கொடுக்கும் போது மற்றவர்களும் மரியாதைக்கு உரியவர்கள் என்கிற விதையினை அவர்கள் மனதில் விதைக்கும் போது அனைவரும் ஒருவரையொருவர் சமமாக மதிக்க பழகுவதுடன் ஒரு அழகான பண்பை வளர்த்துக் கொள்வார்கள். இந்த பண்பு ஒவ்வொரு குடும்பங்களில் கூட வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை ஆண் பெண் பேதமின்றி சமமாக வளர்ப்பதுடன் எந்த காரணத்திற்காகவும் வன்முறையை ஊக்குவிக்க கூடாது. பெண்களை தலைமைத்துவத்தில் தட்டி கொடுக்கலாம். பொதுசேவையில் ஈடுபட அவர்களை ஊக்குவிக்கலாம்.

வறுமையான குடும்பங்கள் அல்லது பெண் தலைமை குடும்பங்களை சேர்ந்த பெண்குழந்தைகள் கல்வியைத் தொடர வாய்ப்புக்களை உருவாக்கலாம். பெண்களை பாதுகாப்பதற்கு என்னென்ன கொள்கைகளை உருவாக்க முடியுமோ அவற்றை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கவும் செயற்படுத்தவும் சமூகப் பொறுப்புள்ளவர்கள் இணைந்து முன் வர வேண்டும்.

ஒரு அழகான சமத்துவமான சமூகத்தை எமது குழந்தைகள் வாழ நாம் அனைவரும் இணைந்து உருவாக்க இந்த சர்வதேச பெண்கள் நாளில் உறுதியெடுத்துக் கொள்ளலாம்.

– ராஜி பாற்றர்சன்

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு