யாழ்., புத்தூர் – நிலாவரை ஆழ் கிணற்றோரமாக இன்று அதிகாலையில் திடீரென வந்து குதித்த புத்தரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள முகாமைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவரே அதனை அங்கு வைத்துவிட்டார் என்று முகாம் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அதற்கு முன்னதாகவே கடும் எதிர்ப்புக் காரணமாக புத்தர் சிலை அங்கிருந்து படையினரால் அகற்றப்பட்டதுடன், அதனை வைப்பதற்குக் கொங்கிறீட் இட்டு நிறுத்தப்பட்டிருந்த பலகையினாலான அடித்தளமும் அகற்றப்பட்டது.
இன்று காலை அந்த இடத்தில் கடைகளைத் திறந்தவர்களுக்கும் அதனூடாகப் பயணித்தவர்களுக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. நிலாவரைக் கிணற்றின் அருகில் நின்ற அரச மரத்தின் கீழ் திடீரென புத்தர் சிலை ஒன்று, பௌத்தர்களின் வழிபாட்டு மரபுக்கு ஏற்ப வைக்கப்பட்டிருந்தது.
இதனால் பதற்றமடைந்த மக்கள் அரசியல்வாதிகளுக்குத் தகவல் கொடுத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்கு முன்பாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அந்த இடத்துக்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-
“நிலாவரை கிணற்றடியில் இரவோடு இரவாக புத்தர் சிலையும் பலகையிலான அமைக்கப்பட்ட சிறு அறை வடிவிலான கட்டுமானமும் கொங்கிறீட் இடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் எனக்குத் தகவல் தந்தனர். இதையடுத்து உப தவிசாளர் உள்ளிட்டவர்களுடன் சென்று பார்த்தேன்.
நாங்கள் சென்ற போது அந்த வழிபாட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை இராணுவச் சிப்பாய் ஒருவர் அங்கிருந்து எடுத்துச் சென்றுவிட்டார் என்று மக்கள் தெரிவித்தனர். ஆனால், சிலையை வைப்பதற்கு அரச மரத்தின் கீழ் நடப்பட்டிருந்த வழிபாட்டிடம் அப்படியே இருந்தது.
உடனடியாக அந்த வழிபாட்டு இடத்தை அகற்றுமாறு உத்தரவிட்டேன். நீதிமன்றத்தில் ஏற்கனவே இது தொடர்பான வழக்கு உள்ள நிலையில் யார் இவ்வாறு செயற்பட்டது என்று கேட்க, அவ்விடத்தில் சீருடையில் நின்றிருந்த இராணுவச் சிப்பாய்கள் யாருடனோ தொலைபேசியில் உரையாடினர். பின்னர் பலகையிலான அந்தக் கட்டுமானத்தை அடியோடு அகற்றி எடுத்து அருகில் இருந்த இராணுவ முகாமுக்குக் கொண்டு சென்றனர்.
அச்சுவேலி பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பிரச்சினை தொடர்பாகக் கேட்டறிந்தனர். பொலிஸார் அங்கு வந்ததும் அருகில் இருக்கும் முகாமின் பொறுப்பதிகாரியும் வந்தார்.
அவரிடம், தமிழ் மக்களின் வாழ்விடங்களை இராணுவ அனுசரணையில் பௌத்த மயமாக்கல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்டித்தேன். இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் தெரிவித்தேன்.
முகாம் பொறுப்பதிகாரியோ, அந்த இடத்தில் காவல் கடமையில் இருந்த இராணுவச் சிப்பாய் ஒருவரே இவ்வாறு நடந்து கொண்டுவிட்டார் என்று தெரிவித்தார்” – என்றார்.
இந்த இடத்தைப் பொளத்தமயமாக்க முற்படுகின்றார்கள் என்கின்ற சந்தேகம் தமிழ் மக்களுக்குப் பலமாக இருக்கின்றது. ஏற்கனவே இராணுவத்தினரின் உதவியுடன் இந்த இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தினர் தோண்டுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் அரசியல்வாதிகள், மக்களின் தலையீட்டைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.
அதனை அரச அதிகாரிகளின் பணிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகப் பொலிஸாரிடம் முறையிட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் வலிகாமம் கிழக்கு தவிசாளர் உள்ளிட்டவர்கள் மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இன்று அந்த இடத்தில் திடீரெனப் புத்தர் வந்து குதித்தார்.