தேர்தலுக்கு எதிரான மனு மே 11 வரை ஒத்திவைப்பு! – உயர் நீதிமன்றம் அதிரடி முடிவு

Share

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் இராணுவ கேர்ணல் ஒருவர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு விசாரணையை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்கும் வகையிலான நீதிப்பேராணையைப் பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தர தாக்கல் செய்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இந்த மனு கடந்த 20 ஆம் திகதி எஸ். துரைராஜா மற்றும் சிரான் குணரத்ன உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இன்றைய தினத்துக்கு முன்னதாக அந்த மனுவை ஆராயுமாறு நகர்த்தல் பத்திரம் ஊடாகக் கோரப்பட்டது.

எனினும், இன்றைய தினத்துக்கு முன்னதாக அதனை விசாரிப்பது அவசியமற்றது என மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தினர்.

தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை என அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

எனவே, மனுவை ஆராய்வதற்காக முன்னர் திகதி குறிப்பிட்டபடி இன்றைய தினமே அழைக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும், இந்தச் சந்தர்ப்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றும் சுட்டிக்காட்டும் மனுதாரர், தேர்தலைப் பிற்போடும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் உள்ளிட்ட 9 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு