சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் மற்றும் ஏனைய அனைத்து சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் 15 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த விடுத்துள்ள அறிவிப்பின்படி, பொதுச் செலவினங்களின் முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், மேலதிக நேரம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் 15 வீதத்தால் குறைக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தவிர, வரும் நாட்களில் மருத்துவமனைகள் தவிர மற்ற சுகாதார அலுவலகங்களை மூடி வைக்குமாறும், பாதுகாப்பு மற்றும் துப்புரவு செலவுகளை 10 சதவீதம் குறைக்குமாறும், நிறுவனங்களின் தலைவர்களுக்கு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை ஊதியம் மாதத்திற்கு 5 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும், தேவையற்ற மின் விளக்குகளை அணைக்கவும், தண்ணீர், எரிபொருள், தொலைபேசி மற்றும் எழுதுபொருட்களின் பயன்பாட்டை குறைக்கவும் சுகாதாரத்துறை செயலாளர் சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்.
நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டறைகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், தேவைப்பட்டால், சுகாதார செயலாளரின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.